இலகு ரயில் சேவை செயற்திட்ட விவகாரம் : ஜப்பானிய பிரதமருக்கு சம்பிக்க ரணவக்க கடிதம்..! - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

இலகு ரயில் சேவை செயற்திட்ட விவகாரம் : ஜப்பானிய பிரதமருக்கு சம்பிக்க ரணவக்க கடிதம்..!

(நா.தனுஜா) 

ஜப்பானின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலகு ரயில் சேவைத் திட்டத்தைக் கைவிடுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனால் ஜப்பான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருந்துவதாக குறிப்பிட்டு முன்னாள் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜப்பானிய பிரதமர் யொஷிஹிதே சுகாவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார். 

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது முதலில் ஜப்பானிய பிரதமராக நியமனம் பெற்றிருக்கும் உங்களுக்கு இலங்கை மக்களின் சார்பில் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். இலங்கையின் போக்குவரத்துத்துறை மேம்பாட்டிற்காக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை விடவும் சிறப்பானதும் நிதி முதலீட்டைப் பொறுத்த வரையில் மிகவும் இலாபகரமானதுமான இலகு ரயில் சேவைத் திட்டத்தை கைவிடுவதற்குத் தற்போதைய அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. 

ஜப்பானிய நிதியுதவியுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. முதலாக அதற்குப் பொறுப்பாக செயலாற்றி வந்த அமைச்சர் என்ற வகையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் கவலையடைகின்றேன். 

அண்மைக் காலத்தில் வெகுவாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இலங்கை பெரிதும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, எமது நாட்டில் போக்குவரத்துத் துறைசார் நடவடிக்கைகளுக்கான தேசிய செலவு வெகுவாக அதிகரித்து வருகின்றது. 

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்தை விடவும் உயர்வான மட்டத்தைக் கடந்து மிகவும் நெருக்கடியான நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதுடன் மாத்திரமன்றி, 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் எதிர்கொண்ட மோசமான பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையக் கூடிய நிலையை அடைந்திருக்கிறது. 

இக்காரணிகளை கருத்திற்கொண்டு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் முதலீட்டுடன் 2008 - 2012 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகளின் பிரகாரம் பேரூந்துக்கான பிரத்யேக வீதி ஒழுங்கை, பேரூந்துகளை நவீனமயப்படுத்தும் செயற்திட்டம், மின்சாரம் மூலம் புகையிரதங்கள் இயங்கும் முறையை நவீனமயப்படுத்தல், இலகு ரயில் சேவை செயற்திட்டம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து 2015 - 2016 வரையான காலப்பகுதியில் இரு நாடுகளையும் சேர்ந்த விசேட நிபுணர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இலகு ரயில் சேவைத் திட்டம் என்பது உபாயமார்க்க ரீதியாக மிகவும் பயனளிக்கத்தக்கது என்று இனங்காணப்பட்டது. 

அதன்படி இலங்கையில் இலகு ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 0.1 சதவீதம் என்ற மிகவும் இலாபகரமான வட்டி வீதத்தில் நிதி வழங்க முன்வந்ததுடன், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கென 14 வருட சலுகைக் காலத்தையும் 40 வருட மீளச் செலுத்துகைக் காலத்தையும் வழங்கியது. 

கடந்த காலத்தில் இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் 6 - 7 சதவீதம் என்ற உயர் வட்டி வீதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுதவிகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் இலாபகரமானதாகும். 

இந்நிலையில் இலங்கையின் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் ஜப்பானின் ஜைக்கா நிறுவனமும் இணைந்து சுமார் இரு வருட காலப்பகுதிக்குள் மேற்படி திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து தயார்ப்படுத்தல்களையும் மேற்கொண்டதுடன், இதுவே உலகலாவிய ரீதியில் ஜைக்கா நிறுவனத்தினால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு அபிவிருத்தி செயற்திட்டமாகவும் கருதப்பட்டது. 

எனினும் இந்த செயற்திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் திடீரென்று நிறுத்தப்பட்டிருப்பதுடன் அதற்கான காரணத்தை அவர்கள் மாத்திரமே அறிவார்கள்.

No comments:

Post a Comment