நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் 'B.1.42' என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்தி வாய்ந்த வைரஸ் என ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட்-19 அலை தொற்று நோய் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக குறித்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகவே கம்பஹா மாவட்ட, மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இலங்கை முழுவதும் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் அடையாளம் காணப்பட்ட முக்கிய 3 விடயங்கள்:
தற்போது பரவி வரும் விகாரங்கள், ஏற்கனவே பரவிய விகாரங்களிலும் வேறுபட்டது.
அதன் உச்ச உயர் வைரஸ் கொள்ளளவு காரணமாக, அது அதிக அளவில் பிரிகையடைந்து, மிக வேகமாக பரவக்கூடியது.
மினுவாங்கொடை, கொழும்பு மாநகர சபை பிரதேசங்கள், மீன் சந்தை கொத்தணிகளில் இவ்வகையான வைரஸ் விகாரங்களே பரவி வருகின்றது.
தற்போது பரவி வரும் விகாரங்களின் (வட்டமிடப்பட்டுள்ளன) Phylogenetics, ஏற்கனவே இலங்கையில் பரவிய விகாரங்களுடன் (நீல புள்ளிகள்) ஒப்பிடப்பட்டுள்ளன. உலக அளவில் காணப்படும் ஏனைய விகாரங்கள் (மூலம்: Nextstrain.org)
இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு / விகாரங்களுக்கு (கந்தக்காடு B.1 இனை சார்ந்தது) உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்தி வாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment