"மத்ரசா தொடர்பில் இனவாத கருத்து வெளியிட்ட சிங்கள பத்திரிகை" - கவலை தெரிவிக்கிறார் ஜமாலியா அரபுக் கல்லூரி அதிபர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

"மத்ரசா தொடர்பில் இனவாத கருத்து வெளியிட்ட சிங்கள பத்திரிகை" - கவலை தெரிவிக்கிறார் ஜமாலியா அரபுக் கல்லூரி அதிபர்

அநுராதபுரம், ஹெட்டுவெவ மத்ரசா பற்றி அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், மத்ரசா அதிபர் சம்சுதீன் தெரிவிக்கின்றார்.

ஜமாலியா அரபுக் கல்லூரி ஆனது, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹெட்டுவெவ கிராமத்தில் அமையப் பெற்றுள்ளது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மத்ரசா இதுவரை பல ஆலிம்களை உருவாக்கியுள்ளதோடு தற்பொழுது 42 மாணவர்கள் கற்றுவரும் பதிவு செய்யப்பட்ட மத்ரசாவாக இயங்கி வருகின்றது.

இம்மத்ரசாவின் 25 வருட நிறைவை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி வெள்ளி விழாவினை கொண்டாடுவதற்கு தீர்மானித்த மத்ரசா நிர்வாகம், இவ்விழாவின் போது மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர் வாழ்த்துச் செய்திகள், அதிதிகளின் வாழ்த்துச் செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி 'வெள்ளி விழா சிறப்பு மலர்' எனும் பெயரில் ஓர் சஞ்சிகையினையும் வெளியிடுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

இதையடுத்து குறித்த சஞ்சிகையினை வடிமைத்தல் வேலைகள் ஆரம்பமானது. இதன்போது மாணவர்கள் பலரிடமிருந்தும் அவர்களுடைய ஆக்கங்கள் பெறப்பட்டது. இதன்போது 'அறபு எழுத்தணியில்' மாணவர் ஒருவர் இலங்கை வரைபடத்தினையும் வரைந்து அதனை தனது ஆக்கமாக வழங்கியிருந்தார்.

அறபு எழுத்தணி என்பது, அரபு எழுத்தினை பயன்படுத்தி சித்திரம் போன்று தமக்கு தேவையான ஓவியங்களை வரைகின்ற ஓர் கலையாகும்.

சஞ்சிகையின் சகல விடயங்களும் மத்ரசா அதிபரின் அனுமதியோடு மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் அச்சிடும் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டது. 

இதன்போது அங்கே பணி புரியும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரால் அரபு எழுத்தணியில் இலங்கை வரைபட உருவில் வரையப்பட்ட ஆக்கம் அவதானிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இலங்கை முழுவதையும் அரபு நாடாக மாற்றப்பார்க்கின்றார்கள் போலும் எனக்கருதி தவறான புரிதலின் அடிப்படையில் இது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தந்துள்ளனர்.

இதையடுத்து மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த மத்ரசா நிருவாககத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி அதிபர், செயலாளர் உட்பட மூவர் பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பிற்கு ஏற்ப அங்கு சென்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இச்சஞ்சிகையில் எதுவித தவறுகளும் இல்லை என, இச்சஞ்சிகையினை முழுதும் தெளிவாக ஆராய்ந்த பின்னர் பொலிசார் கருத்து தெரிவித்தபோதிலும், அரபு எழுத்தணியில் இலங்கை வரைபடம் வரையப்பட்டதற்கான காரணம் வினவப்பட்டுள்ளது. 

இதன்போது அரபு எழுத்தணி என்பது ஓர் கலை என்றும், அது நாம் எமது விருப்பத்திற்கமைய அரபு எழுத்துக்களை கொண்டு வரைதல் ஆகும், இதில் வேறு எதுவிதமான மறைமுக கருத்துக்களும் இல்லை என்பதனை மத்ரசா நிர்வாகாம் பொலிசாருக்கு தெளிவு படுத்தியுள்ளனர்.

இதையடுத்து குறித்த 'அரபு எழுத்தணி' கலை பற்றி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாக ஒரு கடிதத்தினை பெற்றுத்தருமாறு, பொலிசாரால் மத்ரசா நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் சம்மந்தமாக, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன், மத்ரசா நிருவாகம் தொடர்புகொண்டதன் பின்னர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கடிதத்தினை வழங்குவதற்கு திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக பொலிசாருக்கு கிடைக்கப்படுமிடத்து இச்சம்வம் எதுவித பிரச்சினைகளுமின்றி தீர்வடைய இருக்கின்றது.

இதேவேளை, தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு குறித்த வெள்ளி விழா மத்ரசா நிருவாகத்தினால் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கையில், இனவாதம் கக்கும் ஒருசில விஷமிகளினால் இதுபோன்ற பிரச்சினைகள் வேண்டுமென்றே தோற்றுவிக்கப்படுகின்றதோடு ஒரு சில வங்குரோத்து ஊடகங்களும் இனவாதத்தை மக்கள் மனதில் விதைக்கும் முகமாக சம்பவம் தொடர்பில் தெளிவில்லாத செய்திகளை பிரசுரம் செய்வது குறித்து தாம் கவலையடைவதாக மத்ரசா அதிபர் சம்சுதீன் தெரிவித்தார்.

(ஐ.எம். மிதுன் கான் - கனேவல்பொல)

No comments:

Post a Comment