கொள்ளையடித்து சிக்கிய போலி பொலிஸ் கும்பல் - சிறிய வலம்புரி சங்கு, மோட்டார் சைக்கிள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

கொள்ளையடித்து சிக்கிய போலி பொலிஸ் கும்பல் - சிறிய வலம்புரி சங்கு, மோட்டார் சைக்கிள் கைப்பற்றல்

பொலிஸ் உத்தியோகத்தர்களாக தம்மை அடையாளப்படுத்தி 15 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையர் கஹங்தொட்ட சுத்தா உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஐவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹோமாகம - ஹபரக்கட, முல்லேகம பகுதியில் யுவதியொருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேக நபர் தொடர்பில் பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

அதற்கமைய அத்துருகிரிய பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் ஹபரக்கட - முல்லேகம பகுதி மற்றும் மாலபே - சுதர்ஷன மாவத்தை பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடுகளில் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

அத்துடன் கம்பஹா - மல்வத்துகிரிப்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிற்குச் சென்று தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்காளாக அடையாளப்படுத்தி வீட்டிலிருந்த பெண்ணை கைது செய்யப் போவதாகவும் வீட்டை சோதனையிட வேண்டுமெனவும் கூறியுள்ளனர். 

பின்னர் வீட்டை சோதனையிடுகின்ற போர்வையில் அங்கிருந்து 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

அதுமாத்திரமின்றி, குறித்த சந்தேக நபர்கள் பலசரக்குப் பொருட்களை விற்பனை செய்யும் லொறியொன்றை மடக்கி அதனை சோதனையிடும் போர்வையில் லொறியிலிருந்த கிட்டத்தட்ட 1 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துள்ளதுடன் இவ்வாறு பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான கஹந்தொட்ட சுத்தா ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் ஆவார். 

பிரதான சந்தேக நபரின் திட்டத்திற்கமைய அவரின் சகோதரி சகோதரியின் கணவர் மற்றும் இரு நபர்களுடன் இணைந்து தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்களாக அடையாளப்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்து வந்துள்ளனர். 

இவ்வாறு கொள்ளையடித்த தங்க ஆபரணங்களில் சிலவற்றை 1 இலட்சம் ரூபாவுக்கு குருணாகல் பகுதியிலுள்ள நபரொருவருக்கு விற்பனை செய்துள்ளார். 

சந்தேக நபர்களிடமிருந்து சிறிய வலம்புரி சங்கு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

மாலபே - கஹங்தொட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment