இன்று இலங்கை வருகிறார் மைக் பொம்பியோ - நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

இன்று இலங்கை வருகிறார் மைக் பொம்பியோ - நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்) 

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். 

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ தலைமையிலான குழுவினர் நாளை புதன்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. 

இவர்களின் வருகையை முன்னிட்டு அமெரிக்க விமான படைப் பிரிவின் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ள அந்நாட்டு சிறப்பு படைப் பிரிவினரும் இராஜாங்க தினைக்கள புலனாய்வு அதிகாரிகளும் கொழும்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தும் வகையில் தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க்டி. எஸ்பர் ஆகியோரின் கொழும்பு சந்திப்புகள் முக்கியத்துவமிக்கதாகும். 

குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகளில் இலங்கையின் பூரணமான பங்களிப்புகள் மற்றும் பங்குடமை என்பன ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அமெரிக்க குழுவினர் கலந்துரையாடவுள்ளனர். 

அதேபோன்று மிலேனியம் சவால் ஒப்பந்தம், எக்சா மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்களின் அடுத்த கட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. 

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு மிக நீண்ட கால நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து நேருக்கு நேர் பேசப்படுமென கொழும்பு இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர். 

எவ்வாறாயினும் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரத்திற்கு குறுகிய நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ தெற்காசியாவிற்கான விஜயத்தை முன்னெடுத்துள்ளார். 

அது மாத்திரமன்றி உலகின் அனைத்து பாகங்களுக்குமான விஜயத்தில் ஆர்வத்தை கொண்டிருந்த இராஜாங்க செயலாளர் பொம்பியோ நீண்டதொரு அரசியல் பயணத்திற்கான தனது சாயலை வெளிப்படுத்துவதாகவே இவ் விஜயங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment