கோடீஸ்வர வர்த்தகரான மனைவியிடம் பணம் கேட்டும் தராததால் அவர் செலுத்தி வந்த காரின் முன் பாய்ந்து கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொல்கஸ்வோவிட - வெலகும்புர பகுதியைச் சேர்ந்த 42 வயதான ரினோஷ் இந்துனில் பண்டார என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியான கோடீஸ்வர வர்த்தகப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரும் கைதாகியுள்ள பெண்ணும் திருமணமாகியிருந்த நிலையில் இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் அவர் நீண்ட காலமாக பணம் கேட்டு அவரின் கோடீஸ்வர மனைவியை தொல்லை செய்துள்ளார். இது குறித்து பல தடவைகள் கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நபர் சந்தேக நபரான மனைவியின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். அதன்போது அவரின் மனைவியான கோடீஸ்வர வர்த்தகப் பெண் அவரை வீட்டிலிருந்து வெளியில் துரத்திவிட்டு பாமன்கடையிலுள்ள தனது முதல் கணவரின் மூத்த மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவே வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயிரிழந்த நபர் அவரை கண்டித்துப் பேசியதாகவும் பின்னர் அங்கு வந்து ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்ததாகவும் குறித்த பெண் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
தனது கணவரின் தொல்லை தாங்காமல் கோடீஸ்வர வர்த்தகப் பெண் தனது மகளின் கணவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.
பின்னர் அவரையும் அழைத்துக் கொண்டு புதன்கிழமை அதிகாலை காரில் வந்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர் பொல்கஸ்ஓவிட்ட சந்திப் பகுதியில் மறைந்து நின்று திடீரென மனைவி ஓட்டி வந்த காரின் முன்னால் பாய்ந்துள்ளார். இதன் போது காரின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார் . மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment