நாட்டிற்குள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்தாவிட்டால் அனைவரையும் எளிதில் தாக்கும் - எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

நாட்டிற்குள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்தாவிட்டால் அனைவரையும் எளிதில் தாக்கும் - எச்சரிக்கிறது தொற்று நோயியல் பிரிவு

கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவும் வேகம் தற்போது முன்னைய நிலையிலும் பார்க்க அதிகளவில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நடமாட்டத்தை வரையறுக்கப்படாவிட்டால் எதிர்வரும் சில நாட்களில் நோய்த் தொற்று பரவும் நிலை கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் இதே வகையில் தொடர்ந்தும் அதிகரித்தால் நாடு கொரோனா தொற்றின் அனர்த்த அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் நோய்த் தொற்று தொடர்பில் நாம் புதிய அனுபவங்களை காணுகின்றோம். நோய்த் தொற்றாளர்களில் காணப்படும் வைரஸ்களின் அளவு அதிகரித்திப்பதாக குறிப்பிட்ட அவர் முன்னைய நாட்களிலும் பார்க்க வைரஸ் பரவும் வேகம் அதிகளவில் இருப்பதை நாம் காணக்கூயதாக உள்ளது.

வைரஸ் பரவல் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வேகம் அதிகளவில் காணப்படுகிறது. பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போது மக்களின் நடமாட்டம் குறிப்பிட்ட அளவு காணப்படுகின்றது.

நாட்டில் சில பிரதேசங்களில் மாத்திரமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏனைய பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையில் நடமாடுகின்றனர். சமூகத்தின் மத்தியிலும் நடமாடுகின்றனர். மக்களுக்கிடையிலான தொடர்பும் அதிகம். இவ்வாறான செயற்பாடுகள் நோய்த் தொற்றுப் பரவலுக்கு வசதியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தினாலும், சுகாதார பிரிவினர்களினாலும் இதனை கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும். நோய் பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் முதியோர்கள் மற்றும் தொற்றா நோய் உள்ளோர்களையும் எளிதில் தாக்கக்கூடும். 

சமீப கால பகுதியில் திருமண வைபவங்கள், மரண வீடுகளில் மக்கள் கூடுவதை காணக்கூடியதாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டியதாகவும் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment