வட மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும், இரண்டு விதமான அபாயங்கள் காணப்படுகின்றன - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 5, 2020

வட மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும், இரண்டு விதமான அபாயங்கள் காணப்படுகின்றன - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

தற்போதுள்ள கொரோனா சமூக தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் 2 விதமான அபாயங்கள் காணப்படுகின்றன. எமது அண்மை நாடான இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, இந்திய மீனவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஊடாக வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

அதேபோல் வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களில் இருந்து வருபவர்களிலிடம் இருந்து வடக்கு மாகாண மக்களுக்கு கொரோனா தொற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுங்கள். 

குறிப்பாக நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயமாக முக கவசத்தை அணிந்து செல்லுங்கள். ஏற்கனவே, சுகாதார அமைச்சினால் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நீங்கள் இந்த விடயங்களை கடைபிடித்தீர்கள். அந்த நடைமுறைகளை கடைப்பிடித்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

பொது இடங்களில் ஒன்று கூடாதீர்கள். அனாவசியமாக வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்பதற்கு அனைத்து வடக்கு மாகாண மக்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என சஞ்சீவ தர்மரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment