விவசாயிகளுக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் சந்தையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கவனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

விவசாயிகளுக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் சந்தையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கவனம்

விவசாயிகளுக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான சந்தையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களினதும் அறுவடைகளை இடைத்தரகர்களின் சம்பந்தமின்றி விற்பனை செய்யும் வசதியை விவசாயிகளுக்கே நேரடியாக கிடைக்கும் சூழலை ஏற்படுத்தி அதனை ஆரம்பிக்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு குழுவுடன் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முறைப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

தற்போதைய வாழ்க்கைத் தரம் மற்றும் கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள கஷ்ட நிலைமைகளை கவனத்திற் கொண்டு பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி ஜனாதிபதியினால் நேற்றுமுன்தினம் நீக்கப்பட்டது.

தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் உடனடியாக தென்னையை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 50000 ஹெக்டயார் காணியில் புதிதாக தென்னையை பயிரிடுவதை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மரக்கறி, பழ வகைகள், முட்டை என்பவற்றை நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப பிரதேச ரீதியாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் அன்றாட நுகர்வுத் தேவை சுகாதார அமைச்சின் தலையீட்டுடன் அளவிடப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோரை முன்னேற்றும் ஒரு நடவடிக்கையாக வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி மற்றும் பழ வகைகளை பயிரிடுதல் மற்றும் வீட்டு கோழி வளர்ப்பின் மூலம் முட்டை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறை சிறு மற்றும் பெரும் போகத்தின் போது அதிக நெல் அறுவடை கிடைக்கப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எதிர்காலங்களில் நெல் அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது முறைமையொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

புகையிரத திணைக்களத்துடன் இணைந்து பழங்கள், மரக்கறி மற்றும் உரம் ஆகியவற்றை புகையிரதங்களின் ஊடாக கொண்டு செல்வதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்லஸ் தேவானந்த ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, அருந்திக பெர்னாண்டோ, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad