அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் கொண்ட குழு நேற்று (27) இந்தியா வந்தடைந்த நிலையில் இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலை 7.37 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டு சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது.
மைக் பொம்பியோ நாளை காலை இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார். வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிவிகார அமைச்சில் சந்திக்கவுள்ளதுடன் அவருடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ள உள்ளார்.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பு, கொச்சிகடை தேவாலயத்திற்கு செல்ல உள்ளார்.
இதற்கு முன்னர் அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்தப் பயணம் இரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ உத்தியோகப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய அமெரிக்காவின் MCC நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் தலைவராவார்.
அவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அமெரிக்காவின் சர்வதேச உளவுச் சேவையான CIA-இன் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
அத்துடன், கென்சஸ் மாநில காங்கிரஸ் உறுப்பினராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் நாளை மதியம் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தனது விஜயத்தை தொடர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று (27) இந்தியா வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment