சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் - கேள்வி எழுப்பினார் இம்ரான் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் - கேள்வி எழுப்பினார் இம்ரான் எம்.பி.

சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். 

மூதூரில் திங்கள்கிழமை (26) மாலை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இருபதாம் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் கூட்டங்களிலும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட இரவு வரை எங்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததன் நோக்கத்தை மக்கள் முன் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன் அவர்களுடன் என்ன ஒப்பந்தம் செய்தார்கள். தொல்பொருள் செயலணி உள்ளிட்ட காரணங்களை கூறி கிழக்கில் அபகரிக்கப்படும் சிறுபான்மை மக்களின் காணிகளை பாதுக்காப்பது ,எரிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களை தடுப்பது, இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தையும் அவர்களின் பொருளாதாரங்களையும் பாதுகாப்பது போன்று ஏதாவது சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இவர்கள் இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்.

கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் இனி பொதுஜன பெரமுனதான் ஆளும் கட்சி எனவே எதிர்கட்சியில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது அதனால் தான் ஆதரவளித்தோம் என சிலர் கூறுவதை கேட்க முடிந்தது. 

கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற விடயம் இவர்களுக்கு இப்போதுதான் விளங்கியதா?

அவ்வாறு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனில் ஏன் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தீர்கள்? 

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியாதா? 

பொதுஜன பெரமுனதான் ஆளும் கட்சி என தெரிந்தும் ஏன் பாராளுமன்ற தேர்தலில் ஏன் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டீர்கள்? பொதுஜன பெரமுனவிலே போட்டியிட்டிருக்கலாமே. 

இருபதுக்கு ஆதரவு அளிக்கும் முன் உங்கள் பிரதேசத்தில் உங்கள் வெற்றிக்காக உழைத்த சிவில் சமூகம் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் யாருடனாவது ஆலோசனை பெற்றீர்களா? 

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்கும் சர்வதிகார ஆட்சிக்கு உதவி செய்தார்கள் என்ற அவப்பெயருடன் முஸ்லிம்கள் சலுகைகளுக்காக எந்த சந்தர்பத்திலும் எந்த பக்கத்துக்கும் மாறுவார்கள் என்ற இனவாதிகளின் பிரச்சாரம் உண்மையாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment