ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்கவே ஜனாதிபதி தீவிரமாக செயற்படுகிறார் - சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் சரணடைய வேண்டும் : அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, October 17, 2020

ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்கவே ஜனாதிபதி தீவிரமாக செயற்படுகிறார் - சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் சரணடைய வேண்டும் : அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்க

"ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்." என்று அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா - டயகம பகுதியில் இன்று (17) நடைபெற்ற வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "19 ஆவது திருத்தச் சட்டமூலம் இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்டது. தற்போது அதனை செய்ய முற்படும்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 20 இல் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்யலாம். ஆனால், அந்நடவடிக்கையை கைவிட முடியாது.

20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னர், நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அப்பணி நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும். எவராவது தவறிழைத்திருந்தால் தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்." - என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment