தனிமைப்படுத்தல் முகாமாக மாறும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

தனிமைப்படுத்தல் முகாமாக மாறும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு, அதற்கான முன் ஆயத்த வேலைகளை இரானுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியினை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கான நடவடிக்கையின் பொருட்டு இரானுவத்தினருக்கு கல்லூரி நிருவாகம் உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (12) கையளித்து வைத்தனர். 

இதனையடுத்து, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி வளாகம் கொரோன தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படவுள்ளதுடன், அதன் அருகிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இரானுவத்தினர் மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்டோர் தங்கியிருந்து கடமையில் ஈடுபடவுள்ளனர். 

நாட்டில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக, இதற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்ககள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுமாறும் இரானுவத்தினரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 
கல்லூரியின் பயிற்சி ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதனையடுத்து அதனை, சுத்தம் செய்யும் நடவடிக்கையிலும், தொற்று நீக்கம் செய்யும் பணியிலும் இரானுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

250 படுக்கைகளைக் கொண்ட இக்கல்லூரியின் பெண் மாணவர்கள் விடுதி பிரதான தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படவுள்ளது. 

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியை, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவது தொடர்பிலும், இம்முகாமின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சுகாதார செயற்பாடுகள் தொடர்பிலும் கல்விக் கல்லூரி நிருவாகம், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் நாலாபுறங்களிலுமுள்ள எல்லைகளில் பொதுமக்களின் வசிப்பிடங்கள் காணப்படுவதால், இக்கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் இங்கு அமைவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad