கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் சமகால அரசாங்கத்திற்கு உண்டு என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் சமகால அரசாங்கத்திற்கு உண்டு என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரண

கொவிட்-19 வைரஸ் (கொரோனா) தொற்று மீண்டும் நாட்டில் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் சமகால அரசாங்கத்திற்கு இருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வரும் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை தொடர்ந்தும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

இந்த நிலையை தக்கவைத்துக் கொள்வதுடன் இந்த வைரசை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சமகால அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், இதில் திடமாக நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திவுலப்பிட்டிய மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமான வைரஸ் கொத்தணியில் இதுவரையில் 1394 பேர் தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளது.

24,778 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் இந்த தொற்று தொடர்பில் அரசாங்கம் கண்காணித்து வருகின்றது. இதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

பொதுமக்கள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment