இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் மீட்பு

மண்டபம் அருகே உள்ள வேதாளையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை நடுக்கடலில் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாட்டுப்படகுடன் இன்று (20) அதிகாலை பறிமுதல் செய்துள்ளதோடு, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கட்டிகள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜேசப் ஜெயராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறைக்கு சொந்தமான ரோந்து படகில் குழுக்களாக பிரிந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது மண்டபத்தில் இருந்து 25 நாட்டில்கள் தூர நடுக்கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்தி செல்ல 7 மூட்டைகளில் மஞ்சள் கட்டிகள் இருந்தது தெரிய வந்ததையடுத்தது மஞ்சள் மூட்டைகளுடன் நாட்டு படகை கைபற்றிய ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு எடுத்து வந்தனர்.

கைப்பற்றப்பட்ட மூட்டைகளில் சுமார் 500 கிலோ மஞ்சள் கட்டிகள் இருந்துள்ளது. மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய வேதாளை பகுதியை சேர்ந்த சாதிக், ராஜா, முனியசாமி ஆகிய மூவரையும் கைது செய்து சுங்கத்ததுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர்பட்டிணம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment