ஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

ஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும்

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி, தாம் தங்கியிருந்த பிரதேசங்களிலிருந்து சென்ற 454 பேர் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில், ஹோட்டல்கள் உள்ளிட்ட தங்குமிடங்களிலிருந்து குடும்பமாக அல்லது தனியாக தங்கியிருந்த 454 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்கள், தங்கியிருந்த இடங்களிலேயே, பிரதேச சுகாதார அதிகாரிகளின் உத்தரவுக்கமைய இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்

கடந்த வியாழக்கிழமை (29) காலை முதல், மேல் மாகாணம் மற்றும் குளியாபிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் பிரிவுகளிலிருந்து இவ்வாறு வேறு இடங்களுக்கு சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நடவடிக்கையில் குறித்த நபர்களை அடையாளம் காண முடியாது போகும் நிலை ஏற்படும் நிலையில், மீண்டும் திங்கட்கிழமை (02) மேல் மாகாணத்திற்குள் நுழையும் இடங்களில் கடுமையாக சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் கிடைக்கப் பெறும் சாட்சியங்களின் அடிப்படையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார அமைச்சினால் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட கொரோனா தொடர்பான வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, அவர்கள் மீது ரூபா 10,000 அபராதம் அல்லது 6 மாத கடூழிய சிறைத் தண்டனை அல்லது அவை இரண்டு தண்டனைகளும் வழங்க நீதிமன்றத்தினால் முடியும் என அவர் தெரிவித்தார்.

எனவே, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறியவர்கள், தாங்கள் தற்போது தங்கியுள்ள பிரதேசத்திலுள்ள சுகாதார பரிசோதகரை அணுகுமாறு, சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது

No comments:

Post a Comment