தொடர்ச்சியாக நிலைமைகளை அவதானித்து தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனும் நேர்த்தியான தொடர்பாடலை பேணுமாறு தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (23.10.2020) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் சார் சமூகத்தினர் மத்தியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க உட்பட்ட அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகள் அனைவரும் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் .24 மணித்தியாலங்களும் நிலைமைகளை அவதானித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு தன்னுடைய பூரண ஒத்துழைப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு தரப்பினருடனும், சுகாதார துறையினருடனும் இணைந்து நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை பராமரித்தல், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment