கிழக்கின் பல நகரங்களில் இயங்கி 200 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட நிறுவனம் ! உலமாக்களை நம்பியே முதலிட்டதாக கூறும் வாடிக்கையாளர்கள்..!! பள்ளிவாசலொன்றின் 25 இலட்சம் ரூபாவும் சிக்கியது - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

கிழக்கின் பல நகரங்களில் இயங்கி 200 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட நிறுவனம் ! உலமாக்களை நம்பியே முதலிட்டதாக கூறும் வாடிக்கையாளர்கள்..!! பள்ளிவாசலொன்றின் 25 இலட்சம் ரூபாவும் சிக்கியது

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த 'பிரிவேல்த் குளோபல் பிரைவேட் லிமிடட்' எனும் தனியார் நிறுவனம் 200 கோடி ரூபா பணத்தினை சூறையாடியுள்ளதாக அதன் வைப்பாளர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

கொழும்பினை தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் கிளைகள் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், மருதமுனை மற்றும் ஏறாவூர் ஆகிய நகரங்களில் காணப்பட்டன.

மத்திய வங்கியின் அங்கீகாரத்தினை பெறாத நிலையில் நிதி நிறுவனம் என்ற பெயரில் இந்த தனியார் நிறுவனம் செயற்பட்டுள்ளது. 

அத்துடன் "சுமார் 1,400 ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் வைப்பாளர்களுடன் மேற்கொண்டு சுமார் 200 கோடி ரூபா பணத்தினை வசூலித்துள்ளதாக" அதன் வைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைப்பாளர் முலீட்ட பணத்திற்கு 18 - 25 சதவீத வருடாந்த இலாபத்தினை மாதாந்த அடிப்படையில் வழங்க ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த நிறுவனம் நட்டமடையும் பட்டசத்தில் வைப்பாளர்கள் நட்டத்தினையும் ஏற்க வேண்டும் என இந்த நிறுவனத்தின் 'வக்காலா' ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"இவ்வாறான நிலையில் குறித்த தனியார் நிறுவனத்தினால் வசூலிக்கப்பட்ட பணத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இலாபம் வழங்கப்படவில்லை" என வைப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"அது மாத்திரமல்லாமல், வைப்பாட்டாளர்களிடமிருந்து வசூலித்த பல கோடி ரூபா பணத்தினை ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையிலும் வழங்கமால் உள்ளதாக" வைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

"வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து காசோலைகளுக்குமான வங்கிக் கணக்குகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக" வைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களிலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகங்களிலுள்ள பெருங் குற்றத் தடுப்பு பிரிவில் குறித்த நிறுவத்தின் பணிப்பாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, பிரிவேல்த் குளோபல் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு பிடியாணை மற்றும் அழைப்பாணை ஆகியன முறையே பொத்துவில் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களினால் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக இவர்கள் வெளிநாடு செல்வதற்கு குறித்த நீதிமன்றங்களினால் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான நிலையில் இந்த தனியார் நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த திங்கட்கிழமை (05) மாளிகைக்காட்டிலுள்ள வரவேற்பு மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு வறுமாறு:


எஸ்.டி.எம். உவைஸ் (46) - வாழைச்சேனை
"எனது உடன் பிறந்த சகோதரரான எஸ்.டி.எம். றிழ்வான் (44), கடந்த 20 வருடங்களாக ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையாற்றினார். இங்கு மாதாந்தம் சம்பளமாக பெற்று வந்த 10,000 ரூபா பணத்தினை கஷ்டப்பட்டு சேமித்து பெற்ற 2,500,000 ரூபா பணத்தினை இந்த நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வைப்புச் செய்தார்.

எனது மற்றுமொரு சகோதரரின் மைத்துனரான மௌலவியே இந்த நிறுவனத்தின் முகவராக எமது பிரதேசத்தில் செயற்பட்டார். ஏற்கனவே ஒரு கண் பார்வை குறைபாடான நோயாளியாக காணப்பட்ட றிழ்வானை இங்கு வைப்புச் செய்யுமாறு அவரே வற்புறுத்தினார்.

அத்துடன் அதிக இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த முகவர் தெரிவித்தார். இவரை நம்பியே மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தினை எனது சகோதரர் இங்கு வைப்புச் செய்தார். இதற்காக மாதாந்தம் 20,000 ரூபா இலாபமாக வழங்க இணக்கம் காணப்பட்டது.

எனினும் குறித்த இலாபப் பணம் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது என்ற செய்தி எனது சகோதரருக்கு தெரிய வந்ததினை அடுத்து அவர் மிகவும் கவலையடைந்து மன உளைச்சலுக்குள்ளானார். 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், குறித்த செய்தி கேட்டதிலிருந்து சரியான முறையில் இரவில் தூங்துவதில்லை. இதனால் இவரின் நோய்கள் அதிகரித்தன. இவ்வாறான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு தீடிரென இருதய நோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த திங்கட்கிழமை சுமார் 10 மணித்தியாலங்கள் பாரிய சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இவர் கண் திறக்கவேயில்லை. இவரின் இந்த நோய்கான பிரதான காரணம், பணத்தினை வைப்பு செய்து ஏமாற்றப்பட்டமையேயாகும்" என அழுதவாறே கூறினார்.

கோபாலபிள்ளை சிபாஜினி (38) - ஆலையடி வேம்பு
"இரண்டு பிள்ளைகளின் தாயாரான நான், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாதியராக கடமையாற்றுகின்றேன். எனது வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர் ஒருவரின் ஊடாக இந்த நிறுவனம் தொடர்பில் அறிந்துகொண்டேன்.

அதிக கடவுள் நம்பிக்கை காரணமாக எனக்கு வட்டி என்றால் பயமாகும். இதனால் ஷரீஆ அடிப்படையில் வட்டியின்றி இலாபம் வழங்கும் இஸ்லாமிய வங்கியாக இது செயற்படுகின்றது என்ற அடிப்படையில் குறித்த நிறுவனத்தின் பொத்துவில் கிளையில் 3,050,000 ரூபா பணத்தினை வைப்புச் செய்தேன்.

இதற்காக 2,000,000 பணத்தினை அரசாங்கத்திடமிருந்து கடனாக பெற்றிருந்தேன். குறித்த கடனிற்கான வட்டியும் முதலும் எனது மாத சம்பளத்திலிருந்தே தற்போது அறவிடப்படுகின்றது.

இந்த நிறுவனத்தில் நிதியினை வைப்புச் செய்தமையினால் எனது குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினேன். எனினும் தற்போது முதலீட்டுக்கான இலாபமுமில்லை, முதலீடுமில்லாது தவிக்கின்றேன்.

அது மாத்திரமல்லாமல் நான் வைப்புச் செய்தமைக்காக வழங்கப்பட்ட காசோலையினை இந்த நிறுவனத்தின் பொத்துவில் முகாமையாளரின் வேண்டுகோளிற்கினங்க கல்முனைக் கிளையில் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்திருந்தேன்.

இதனால் தற்போது பணமுமில்லை, காசோலையுமில்லாது நடுத் தெரிவில் நிற்கின்றேன். இந்த நிறுவனத்தினால் திட்டமிடப்பட்ட முறையில் நான் ஏமாற்றப்ட்டிருக்கின்றேன்" என கண்ணீர் மல்க கூறினார்.

எம்.ஐ.எம்.வக்கீல் - சாய்ந்தமருது
"இந்த நிறுவனத்தினர் எம்மை ஆசை காட்டி, மோசம் செய்துவிட்டனர். இந்த நிறுவனம், கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி நிறுவனமாக இந்த நிறுவனம் செயற்படுவதற்கு மத்திய வங்கியினால் அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனத்தில் நாங்கள் வைப்புச் செய்தமை பிழையான விடயமாகும்.

எனினும் அனுமதியின்றி குறித்த நிறுவனம் நிதி நடவடிக்கையில் ஈடுபட்டமை பாரிய குற்றமாகும். மக்களினை ஏமாற்றும் நோக்கில் திட்டமிட்டே இவர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமை தொடர்பில் குறித்த நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "அங்கு பதிவு செய்தால் அதிக இலபாம் வழங்க முடியாது" என்றனர்.

"அத்துடன் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டி வரும். இதனால் வைப்பாளர்களுக்கு குறைந்த இலாபத்தினைத்தான் வழங்க முடியும் என்பதால் அங்கு பதிவு செய்யவில்லை" என இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 12ஆம் திகதி சாய்ந்தமருதுக்கு வருகை தந்த குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான சிஹாப் சரீம் ஆறு மாதத்தினுல் கணக்கினை முடிப்பேன் என அல்லாஹ் மீது பகிரங்கமாக சத்தியம் செய்தார்.

"நாட்டுக்குள் செயற்படுகின்ற நான்கு கம்பனிகளிலேயே குறித்த பணம் முதலீடு செய்துள்ளதால் 95 சதவீத பணம் என் கைகளில் உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். 

அது மாத்திரமல்லாமல் கடந்த ஓகஸ்ட் மாத காலப் பகுதிக்குள் முதலீடுகளை மீள வழங்குவதாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்திருந்தார். எனினும் குறித்த வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை" என்றார்.

ஜே.எஸ்.ஆப்தீன் - கஹட்டகஸ்திகிலிய, அநுராதபுரம்
"கடந்த 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் 2,000,000 ரூபா பணத்தினை வைப்புச் செய்தேன். இதற்காக எனக்கு ஏழு மாதங்களுக்கு மாத்திரமே இலாபம் வழங்கப்பட்டது.

தற்போது முதலீடுமில்லை, அதற்கான இலாபமுமின்றி வீதியில் நிற்கின்றேன். இந்த நிறுவனத்தின் கிளைகள் எதுவும் எமது ஊரிலோ அல்லது மாவட்டத்திலே செயற்படவில்லை.

எனினும், எமது ஊரினைச் சேர்ந்த மௌலவியொருவரை நம்பியே இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்தோம். அவரும், அவருடைய நண்பரான திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த நபரொருவரும் இணைந்து எம்மை ஏமாற்றி விட்டார்கள்.

அமானா வங்கியில் வைப்புச் செய்வதாகவே தெரிவித்து நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனால் தற்போது நாங்கள் கைசேதத்திற்குள்ளாகியுள்ளோம். 

தேவையான நேரத்தில் பணத்தினை மீளப் பெற முடியும் மற்றும் எப்போதும் இலாபமே கிடைக்கும் எனத் தெரிவித்தமையினாலேயே இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்தோம்.

எனினும் அது தற்போது இடம்பெறவில்லை. எமது மாவட்டத்தினைச் சேர்ந்த சுமார் 50க்கு மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபா பணத்தினை வைப்புச் செய்துள்ளனர்" என்றார். 

எம்.ஐ.எம். ஆரிப் (36) வாழைச்சேனை
"கடந்த பல வருட காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் மூலம் கொள்வனவு செய்த படகினை கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் விற்பனை செய்தேன்.

இதன் மூலம் கிடைக்கப் பெற்ற சுமார் 3,000,000 ரூபா பணத்தில் 1,500,000 ரூபாவினை இந்த பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வைப்புச் செய்தேன். இதற்காக மாதாந்தம் 27,000 ரூபா இலாபம் வழங்க இணக்கம் காணப்பட்டது.

முதல் நான்கு மாதங்களிற்கு மாத்திரமே இலாபம் சிறந்த முறையில் கிடைக்கப் பெற்றது. அதற்கு பின்னர் உரிய திகதிக்கு கிடைக்காமல் பல்வேறு இழுத்தடிப்புகளிற்கு பின்னரே கிடைக்கப் பெற்றது. எனினும் நவம்பர் மாதத்தின் பின்னர் இலாபப் பணமும் கிடைக்கவில்லை.

நான் வைப்பு செய்த பணத்திற்கு 2020 ஜனவரி 29ஆம் திகதியிடப்பட்ட பான் ஏசிய வங்கியின் காசோலையொன்று வழங்கப்பட்டது. குறித்த காசோலையினை கடந்த மார்ச் மாதம் எனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தபோது, குறித்த காசோலையின் வங்கிக் கணக்கு 2019ஆம் ஆண்டே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எங்களது ஊரினைச் சேர்ந்த உலமா ஒருவரே இந்த நிறுவனத்தின் முகவராக செயற்பட்டார். அவரை நம்பியே இந்த நிறுவனத்தில் நான் வைப்பு செய்தேன். இந்த நிறுவனத்தினால் அரிசி விற்பனை, தங்கம் மற்றும் மாணிக்க வியாபாரம், வாகனம் வியாபாரம் மற்றும் துருக்கியிலிருந்து சிறுவர்களுக்கான பேம்பர்ஸ் (pampers) இறக்குமதி போன்ற மேற்கொள்ளப்படுவதாக குறித்த முகவர் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் வியாபாரங்கள் அனைத்தும் ஷரீஆ அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக எங்கள் உரைச் சேர்ந்த முகவரான மௌலவி பத்வா வழங்கினார். அத்துடன் இந்த பணத்திற்கு நான் பொறுப்பு எனவும் குறித்த முகவர் குறிப்பிட்டார்.

எமது ஊரிலுள்ள பிரபல உலமாக்கள் இருவரும் இந்த நிறுவத்தில் வைப்புச் செய்துள்ளதாக குறித்த முகவர் எம்மிடம் கூறியே எமது பணத்தினை பெற்றுக் கொண்டார். இவற்றையெல்லாம் நம்பியே நான் இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்தேன். இதனால் எனக்கு இன்று பணமுமில்லை, தொழிலுமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். 

இதன் காரணமாக இன்று நான் மற்றையவர்களின் படகில் கூலியாளியாக செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வாழைச்சேனை, மீராவோடை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 பேர் சுமார் 5 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தினை இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்துள்ளனர்" என்றார்.

ஏ.எம்.எம்.நியாஸ் (48) - கல்முனை
"இந்த நிறுவனத்தில் நான் 50 இலட்சம் ரூபா பணத்தினை வைப்புச் செய்துள்ளேன். கடந்த ஒரு வருட காலமாக எந்தவொரு முதலீட்டு இலாபத்தினையும் முதலீட்டையும் வழங்காமல் கணக்கு மூடப்பட்ட காசோலையை வழங்கி என்னைப் போன்ற அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக அனைத்து வைப்பாளர்களினதும் அன்றாட வாழ்க்கை பறிபோயுள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலர் தொழில்களை இழந்து பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கும் சென்றுள்ளனர்.

இடியப்பம் சுட்டு விற்று சேமித்த பணத்தினை பல பெண்கள் இந்த நிறுவனத்தில் முதலீட்டுள்ளனர். இதனால் குறித்த ஏழை மக்கள் மிகவும் கஷ்டத்தில் உண்பதற்கு உணவின்றி உள்ளனர்.

இவர்கள் உயிர் வாழ்வதற்காக சேமித்த பணத்தினை வீடு வீடாகச் சென்று இந்த நிறுவனத்தின் முகவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். இதனால் குறித்த தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன் இந்த கம்பனியின் சொத்துக்கள் மற்றும் கம்பனி பணிப்பாளர்களின் சொத்துக்கள் ஆகியவற்றினை அரசாங்கம் சுவீகரித்து பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் பணத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் எனப் பலருக்கு தெரியப்படுத்தியும் கூட அசமந்த போக்காகவே காணப்படுகின்றனர்" என்றார்.

பள்ளிவாசலின் பணமும் சிக்கியது
மத்திய கொழும்பிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பள்ளிவாசலொன்றுக்கு சொந்தமான 2,500,000 ரூபாவும் நிர்வாகத்தின் எந்தவித அனுமதியுமின்றி இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலின் பிரதான மூலதனமாகக் காணப்பட்ட இந்த நிதி, முன்னர் அமானா வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் கிடைக்கும் இலாப பங்கின் ஊடாகவே பள்ளிவாசலின் பரிபாலன செலவுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கு அறிவிக்காமல், நிர்வாகத்தின் முக்கிய பதவியிலிருந்த இருவர், அமானா வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணம் மீளப் பெற்று இந்தக் கம்பனியில் வைப்புச் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குறித்த பள்ளிவாசலை பரிபாலிக்க நிதி இல்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பள்ளிவாசலின் நிர்வாக சபை தீவிரமாக ஆராய்ந்த போதே இந்த உண்மை வெளியாகியுள்ளது.

தற்போது பள்ளிவாசலின் பரிபாலன செலவுகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, பள்ளிவாசலின் பிரதான மூலதன நிதியினை விரைவில் வழங்குவதாக குறித்த நபர் உறுதியளித்துள்ளார்.

பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை!

இந்த நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்ட ஏ.ஏ.எஸ். சுக்குரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் கடந்த செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சிஹாப் சரீம் மற்றும் பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவினையும் பொத்துவில் நீதவான் எம்.எச். முஹம்மத் ராபீ பிறப்பித்தார்.

காசோலை மோசடி மற்றும் மத்திய வங்கியில் நிதி நிறுவனமாக பதிவு செய்யாது பொதுமக்களின் பணத்தினை வசூலித்து பண மோசடி செய்தமை ஆகியன தொடர்பில் மேற்குறிப்பிட்ட மூவருக்கு எதிராக 12 முறைப்பாடுகள் அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்ட சுக்குர் கடந்த திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டு பொத்துவில் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (06) ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போதே, இவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் எம்.எச். முஹம்மத் ராபீ உத்தரவிட்டார். அத்துடன் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சிஹாப் சரீம் மற்றும் பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவினையும் அவர் பிறப்பித்தார்.

அத்துடன் குறித்த மூன்று நபர்களும் வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவினையும் நீதவான் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஏ.பீ.எம்.மாஹீர் மற்றும் ஏ.எம்.சாதீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடப்பில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சிஹாப் சரீமை தொடர்புகொண்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

"கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்ற எனது கம்பனிக்கு அவப் பெயரினை எற்படுத்தும் முயற்சி தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனது நிறுவனத்தின் கல்முனை கிளையில் பணியாற்றி சுகபோகங்களை அனுபவித்த சிலரினாலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 1,200 கோடி ரூபா பணத்தினை நான் அபகரித்துள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.

இது முற்றிலும் தவறானதாகும். எமது கம்பனியினால் 170 கோடி ரூபா பணம் மாத்திரமே வைப்பாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் உலக பொருளாதார சந்தையில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மை காரணமாக குறித்த பணத்தினை முதலீட்ட கம்பனிகளினால் தற்போதைய சூழ்நிலையில் பாரிய தொகை பணத்தினை வழங்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே வைப்பாளர்களின் முதலீட்டையும், முதலீட்டு இலாபத்தினையும் வழங்க முடியாத நிலைக்கு எமது கம்பனி தள்ளப்பட்டுள்ளது. எனினும் வைப்பாளர்களுக்கான பணத்தினை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது நான் முன்னெடுத்துள்ளேன்.

ஆனால் இதனை ஒரு நாளைக்குள் வழங்க முடியாது. இதற்கு சில காலம் தேவைப்படும். கடந்த சில நாட்களாக வைப்பாளர்களில் சிலரின் பல கோடி ரூபாவினை நான் திருப்பிச் செலுத்தியுள்ளேன். இவ்வாறான நிலையில் என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு நான் சிறைக்கு சென்றால் இவர்களின் பணத்தினை யாரால் வழங்க முடியும்?

பிரிவேல்த் குளோபலுடன் எந்தவித தொடர்புமற்ற எனது மனைவிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அடுத்த ஆறு மாதங்களிற்கு அனைத்து பணத்தினையும் வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி சாய்ந்தமருதில் வைத்து உறுதியளித்தேன்.

எனினும் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டு எட்டு நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுலில் இருந்தது. இப்படியான சூழ்நிலையில் எவ்வாறு ஆறு மாதங்களில் குறித்த பணத்தினை வழங்க முடியும். எவ்வாறாயினும் வைப்பாளர்களின் பணத்தினை நிச்சயமாக நான் திருப்பி வழங்குவேன்" என்றார்.

றிப்தி அலி 

No comments:

Post a Comment