சாணக்கியன் எம்.பி. உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - நீதிமன்றத்தில் ஆஜரானார் சட்டத்தரணி சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

சாணக்கியன் எம்.பி. உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - நீதிமன்றத்தில் ஆஜரானார் சட்டத்தரணி சுமந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

திலீபனை நினைவு கூறும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி சுமந்திரனால் பொலிஸார் போலியான குற்றச் சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தினை தவறான வழியில் நடாத்த முற்படுவதாக கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார்.

யுத்தத்தில் திலீபன் இறக்கவில்லையெனவும் பொய்யான வகையிலான குற்றச் சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தினை வீண்விரயம் செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தினையும் நீதிமன்றில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து தொடரப்பட்டிருந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்தி நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தார்.

பொய்யான குற்றச் சாட்டுகளை வைத்து வழக்குகளை தயார் செய்யும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment