இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல் தொடரை நிராகரித்தார் குமார் தர்மசேன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல் தொடரை நிராகரித்தார் குமார் தர்மசேன

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட நடுவர்களில் ஒருவரான இலங்கையின் குமார் தர்மசேன இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டி-20 தொடரில் பணியாற்றுவதை நிராகரித்துள்ளார்.

அதற்கு பதில் அவர் இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கள நடுவர்களில் ஒருவராக பணியாற்றவுள்ளார்.

இம்முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் உலகின் செல்வந்த கிரிக்கெட் தொடரான இந்தப் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகவே இந்தியாவுக்கு வெளியில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இம்முறை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதை ஐ.சி.சி இன் பல உயர்மட்ட நடுவர்களும் நிராகரித்திருப்பதாக தெரியவருகிறது.

“அடுத்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை இலங்கை மண்ணில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் உயர்மட்ட நடுவராக குமார் தர்மசேனவையும் போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்லவையும் ஐ.சி.சி. ஏற்கனவே நியமித்துள்ளது” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தர்மசேனவுடன் ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி மற்றும் லின்டன் ஹனிபல் தவிர, பதில் நடுவராக பிரகீத் ரம்புக்வெல்ல பகிர்ந்து பணியாற்றுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவம் மிக்க நடுவராக இருக்கும் குமார் தர்மசேன இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். அவருக்கு அடுத்து அதிக அனுபவம் பெற்றவராக ருச்சிர பல்லியகுருகே உள்ளார். அவர் மூன்று டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 33 டி-20 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

அதேபோன்று விமலசிறி 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி-20 போட்டிகளிலும் ஹனிபல் எழு ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி-20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளனர். தவிர ரம்புக்வெல்ல மூன்று டி-20 போட்டிகளில் நடுவராக செயற்பட்ட அனுபவம் உடையவராவார்.

பங்களாதேஷ் அணி செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதோடு மூன்று டெஸ்ட் போட்டிகளும் கொழும்பு மற்றும் கண்டி, பல்லேகல அரங்கில் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment