அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ‘வியத்மக’ அமைப்பிடம் ஜனாதிபதி வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ‘வியத்மக’ அமைப்பிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ‘வியத்மக’ அமைப்பிடம் வேண்டுகோள்-President Meets Members of Viyathmaga
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘வியத்மக” அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.

‘வியத்மக’ பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்விமான்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட (சிறந்த எதிர்காலத்திற்கான தொழிற்பண்பட்டவர்கள்) அமைப்பாகும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘வியத்மக’ செயற்பாடுகள் மக்களின் அரசியல் சமூக சிந்தனையில் ஆழமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் அதிகாரம் தலையிட வேண்டிய இடங்களை இனங்கண்டு அதில் சம்பந்தப்படாது நாட்டின் எதிர்கால பயணத்திற்காக திட்டங்களையும் கொள்கைகளையும் தயாரிக்கும் பொறுப்பு வியத்மகவிற்கு முன்னால் உள்ளதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ‘வியத்மக’ அமைப்பின் தலைவராக நேற்று (13) பிற்பகல் எத்துல் கோட்டையில் உள்ள ‘வியத்மக’ அலுவலகத்தில் முதன்முறையாக அதன் உறுப்பினர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளடங்களாக அனைத்து மக்களையும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமையை வழங்கி, இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு பங்களிக்கக்கூடிய வழிவகைகள் குறித்தும் ஜனாதிபதி ‘வியத்மக’ நிறைவேற்றுச் சபைக்கு தெளிவுபடுத்தினார்.

உப குழுக்களை அமைத்து முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை முன்வைத்து இராஜாங்க அமைச்சுக்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வழி காட்டவும் அமைச்சரின் முன்னுள்ள சவாலான சந்தர்ப்பங்களின் போது ஆலோசனைகளை வழங்கி உதவுவதற்கும் முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘வியத்மக’ நிறைவேற்றுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், பிரதேச மட்டத்தில் கொள்கை வகுப்பதில் பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், நாலக்க கொடகேவா, சரத் வீரசேகர, சீத்தா அரம்பேபொல ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் உப்புல் கலபத்தி உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad