வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள், புதிய கட்டுப்பாடுகள் அமுல் - பிரித்தானியா பிரதமர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள், புதிய கட்டுப்பாடுகள் அமுல் - பிரித்தானியா பிரதமர் அறிவிப்பு

பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு உலக நாடுகளைப்போல பிரித்தானியாவிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் முதல் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

நாளடைவில் அங்கு தொற்று குறைய தொடங்கியது. இதனால் ஊரடங்கை விலக்கிக் கொண்ட அரசு, பாடசாலைகள் - கல்லூரிகளை திறந்தது. 

ஆனால் சமீப காலமாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 4,368 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 3,98,625 ஆக உயர்ந்திருந்தது. சாவு எண்ணிக்கையும் 41,788 ஆகி விட்டது.

இதைத்தொடர்ந்து பிரித்தானியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்தார். 

இது தொடர்பாக நாடாளுமன்ற பொதுச்சபையில் அவர் கூறியதாவது பிரித்தானியா தற்போது ஒரு ஆபத்தான திருப்புமுனையை எட்டியுள்ளது. எனவே நாம் புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தாக வேண்டும். 

அதன்படி பார்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் நாளைமறுதினம் (வியாழக்கிழமை) முதல் இரவு 10 மணி வரையே செயல்பட வேண்டும். திருமணங்களில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை 30 இல் இருந்து 15 ஆக குறைக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம், விளையாட்டு கிளப்புகள் திறப்பது ரத்து செய்யப்படுகிறது.

நிறுவனங்களின் ஊழியர்கள் முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள். அதேநேரம் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம்.

அனைவரும் முகக் கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். தவறுவோருக்கு அபராதம் இரு மடங்காக அதாவது 200 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும். ஆனால் தொற்று அதிகரித்தால், மேலும் நீட்டிக்கப்படும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

No comments:

Post a Comment