நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் எம்மால் ஒருபோதும் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு எனும்போது தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல், வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல், நாட்டிற்குள் எழத்தக்க பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், மதத்தின் கோட்பாடுகளைத் தவறாக அர்த்தப்படுத்தி அதன்மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்தும் செயற்பாடுகளைத் தோற்கடித்தல் உட்பட இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது அதனால் ஏற்படும் அழிவுகளைக் கட்டுப்படுத்தல், கொவிட் - 19 வைரஸ் தொற்று நோய்ப்பரவல் போன்ற நெருக்கடிகளின் போது அதனை முகாமை செய்தலும் தேசிய பாதுகாப்பிற்குறிய விடயங்களே என அவர் தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் எம்மால் ஒருபோதும் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியாது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தனது கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் நிலையில், அது தற்போது ஒரு அரச ஆவணமாக மாறியிருக்கிறது. அதிலும் தேசிய பாதுகாப்பிற்கே முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய பாதுகாப்பு எனும்போது தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல், வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல், நாட்டிற்குள் எழத்தக்க பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், மதத்தின் கோட்பாடுகளைத் தவறாக அர்த்தப்படுத்தி அதன்மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்தும் செயற்பாடுகளைத் தோற்கடித்தல், இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது அதனால் ஏற்படும் அழிவுகளைக் கட்டுப்படுத்தல், கொவிட் - 19 வைரஸ் தொற்று நோய்ப் பரவல் போன்ற நெருக்கடிகளின் போது அதனை முகாமை செய்தல் உள்ளிட்டவை தேசிய பாதுகாப்பிற்குள்ளேயே அடங்குகின்றன.
அண்மையில் கொரோனா வைரஸ் பரவலினால் பெரும் பாதிப்பிற்குள்ளான இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களும் 'நாங்கள் இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்குகின்றோம்' என்று அறிவித்தார்கள். எனவே பயங்கரவாதத்தின் போது மாத்திரமன்றி இத்தகைய சூழ்நிலைகளிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பே கேள்விக்குறியாகின்றது. ஆகவேதான் நாம் தொடர்ந்தும் அதற்கு முன்னுரிமை வழங்கி செயலாற்றி வருகின்றோம்.
கடந்த காலத்தைப் போன்று இன்னும் 4 - 5 வருடங்களுக்கு இந்த நாடு நிர்வகிக்கப்பட்டு இருக்குமானால், நிச்சயமாக இது ஒரு சோமாலியாவாக மாறியிருக்கும். அண்மைக் காலமாக பெருமளவான போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். தெருவோரமாக சாதாரண கடை வைத்திருப்பவர் கூட கப்பம் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் போதைப் பொருள் பாவனை போன்ற தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்களோ என்று பெற்றோர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment