ரஷிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்தன - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

ரஷிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்தன

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சியின் உடலில் நோவிசோக் நச்சுப் பொருள் கலந்ததை, ஜெர்மனியை தொடர்ந்து பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் ஆய்வகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ரஷிய ஜனாதிபதி புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி. 

இவர் சமீபத்தில் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அலெக்சியை கொலை செய்ய அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ராணுவ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், நோவிசோக் எனப்படும், மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சுப் பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

ஆனால் ஜெர்மனியின் இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. எனினும் அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஷியாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நோவிசோக் நச்சுப் பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ஜெர்மனி அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சைபர்ட் இதுபற்றி கூறுகையில் “அலெக்சியின் உடலில் நோவிசோக் நச்சுப் பொருள் கலந்ததை, ஜெர்மனியை தொடர்ந்து பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் ஆய்வகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதுபற்றி ரஷியா முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களது ஐரோப்பியா நட்பு நாடுகளுடன் நெருக்கமான ஆலோசனையில் இருக்கிறோம்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad