சஹரான் பயன்படுத்திய வௌிநாட்டு சிம் அட்டைகளின் பின்புலத்தில் இருப்பது யார்? - இரண்டாவது நாளாகவும் ரவூப் ஹக்கீம் ஆணைக்குழுவில் சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

சஹரான் பயன்படுத்திய வௌிநாட்டு சிம் அட்டைகளின் பின்புலத்தில் இருப்பது யார்? - இரண்டாவது நாளாகவும் ரவூப் ஹக்கீம் ஆணைக்குழுவில் சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக சக்தியொன்று இயங்கியதை, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய சிம் அட்டைகளும் உறுதிப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இரண்டாவது நாளாகவும் ரவூப் ஹக்கீம் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (09) பிற்பகல் சாட்சியமளித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக சக்தியொன்று இயங்கியதாக நேற்றுமுன்தினம் ஆணைக்குழுவில் தெரிவித்த ரவூப் ஹக்கீம், குறித்த மறைமுக சக்தி சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு தாக்குதலுக்கான நிதி உதவியை வழங்கியதாக நேற்று கூறினார்.

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சில சிம் அட்டைகள் நேபாளம், கிர்கிஸ்தான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளுக்குரியவை என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளின் கவனத்திற்கு உள்ளாகாத வகையில் இத்தகைய சிம் அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு பாரிய உந்துசக்தியாக யாரேனும் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலின் பின்புலத்தில் வௌித்தரப்பு சக்தியொன்று இருந்ததாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது வினவினார்.

அதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம், கட்டாயமாக வௌித்தரப்பு சக்தியொன்று உள்ளது எனவும் இவ்வாறு திட்டமிட்ட வகையில் படுகொலையை புரிவதற்கு உள்ளக ஒத்துழைப்பினால் மாத்திரம் முடியாது எனவும் கூறினார்.

வௌித்தரப்பு சக்தியை அடையாளப்படுத்த முடியாது எனவும் அதனை கண்டுபிடிக்க வேண்டியது புலனாய்வு சேவையின் கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சஹரான் ISIS பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புபடவில்லை என தாம் ஏற்கனவே தெரிவித்த கருத்தை நினைவுகூர்ந்து சாட்சியமளித்த ரவூப் ஹக்கீம், தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, இந்த தாக்குதல் ISIS பயங்கரவாதிகளால் நடத்தப்படவில்லை என நம்புவதாக மறைமுகமாக கூறியதாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க சஹரான் கடும்போக்கான மதப் பிரசாரங்களை மேற்கொள்ளும் காணொளியொன்றை தமக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் அது இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்று எனவும் ரவூப் ஹக்கீம் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

இது நாட்டிற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அதனை ஆராயுமாறு மைத்திரி விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சஹரான் மற்றும் அவரது குழுவை கைது செய்வதற்காக 50 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment