முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததை அம்பலப்படுத்தினார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததை அம்பலப்படுத்தினார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

(எம்.எப்.எம்.பஸீர்) 

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர், பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷீம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்வுக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்தார். 

அத்துடன் அந்த விடயம் குறித்த விசாரணைகளை தேசிய உளவுச் சேவையின் பிரதானியாக அப்போது இருந்த தற்போதைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன முன்னெடுப்பார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

இதன்போதே நேற்று இரவு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் சாட்சியமளிக்கும் போதே ஹேமசிறி பெர்ணான்டோ மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார். 

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் பல்வேறு தரப்பினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய பல்வேறு விடயங்கள் காரணமாக தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் விரிசல் ஆரம்பித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் கேள்விக்கு பதிலளித்து ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார். 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், இறுதியாக இடம்பெற இருந்த புலனாய்வு இணைப்புக் கூட்டம் கடந்த 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்றதா? என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன வினவினார். 

அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்ணான்டோ, 'இல்லை... பண்டிகை காலம் என்பதால் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் விடுமுறையில் சென்றிருந்தனர். அதனால் அந்த கூட்டத்தை நான் நடாத்தவில்லை. அத்துடன் செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக புலனாய்வு இணைப்புக் கூட்டத்தை நடாத்த வேண்டும் என ஒன்றும் கட்டாயம் இல்லை' என பதிலளித்தார். 

'நீங்கள் ஒரு ஒழுங்கு முறையில் உங்கள் வேலைகளை முன்னெடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜின சேன மீளவும் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, 'நான் அதனை நிராகரிக்கின்றேன். தேசிய உளவுச் சேவை சரியான முறையில் உளவுத் தகவல்களை முன்வைக்கவில்லை. குறித்த தாக்குதலுக்கு முன்னர் நடந்த இறுதி புலனாய்வு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கூட நிலந்த ஜயவர்தன, அப்போது கிடைத்திருந்த தகவல்கள் தொடர்பில் எதனையும் கதைக்கவில்லை. சஹ்ரான் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவுக்கே விசாரணைகள் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. எனவே அவர் அது தொடர்பில் எமக்கு கூற வேண்டும். சஹ்ரான் தொடர்பிலான விசாரணைகளை ஜனாதிபதி நிலந்த ஜயவர்தனவுக்கு எழுத்து மூலம் பாரப்படுத்தியிருந்தார் என எனக்கு தெரியும்' என கூறினார். 

இந்த பதிலை அடுத்து, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை நோக்கி 'ஜனாதிபதி, நிலந்த ஜயவர்தனவுக்கு அவ்விசாரணைகளை கையளித்ததாக உமக்கு எப்படி தெரியும். அதனை உறுதிசெய்ய உங்களிடம் சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்ணான்டோ, 'ஆம்... என்னால் அதனை உறுதிப்படுத்த முடியும். எனக்கு இதனை முன்னாள் தேசிய உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தெரிவித்திருந்தார். ஏனெனில் அப்போது நான் பாதுகாப்பு செயலாளர் இல்லை. அதாவது 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் வைத்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை நோக்கி, 'பூஜித.., நீங்கள் இனிமேல் என்.டி.ஜே. சஹ்ரான் தொடர்பில் விசாரிக்க வேண்டாம். இது தொடர்பில் பூரணமான விசாரணையை நிலந்தவிடம் ஒப்படையுங்கள்..' என கூறியுள்ளார். அது முதல் சஹ்ரான் தொடர்பில் அனைத்து விசாரணைகளையும் நிலந்த ஜயவர்தனவே முன்னெடுத்தார். 

இதன்போது, மீளவும் ஆணைக்குழு உறுப்பினர், அப்படியானால் உளவுச் சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்ததா என வினவினார். 

அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்ணான்டோ, 'உலகில் எந்த ஒரு தேசிய உளவுச் சேவையும் நூற்றுக்கு ஒரு குறிப்பிட்ட வீதம் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். எமது நாட்டிலும் 25 வீதம் அப்படித்தான். எனினும் 52 நாள் அரசாங்க சர்ச்சைகளை தொடர்ந்து, தேசிய உளவுச் சேவை நூற்றுக்கு நூறு வீதம் அரசியல் நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் ஸ்திரத்துக்கு தேவையான, எதிர்க்கட்சியினரின் தகவல்களை பெற்றுக் கொள்ளவே அவர்கள் கூடுதலாக பயன்படுத்தப்பட்டனர். அவற்றை அவர்கள் நேரடியாக ஜனாதிபதிக்கே அறிவித்தனர். பாதுகாப்பு செயலராகிய நான் கூட அவற்றை அறிந்திருக்கவில்லை.' என தெரிவித்தார். 

இந்நிலையில் தொடர்ந்தும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளளர் ஹேமசிறி பெர்ணான்டோ, தாக்குதல்களுக்கு முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானி தற்போதைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். 

'ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என அப்போதைய அரச தேசிய உளவுச் சேவையின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவித்திருக்க வேண்டும். வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கை ஊடாக, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டது. 

எனினும் தாக்குதல் நடத்தப்படும் என உறுதியாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இந்த எச்சரிக்கைகளின் பாரதூரத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதியான தகவல்களை வழங்காது, எச்சரிக்கை உள்ளதென மாத்திரம் குறிப்பிட்டமை, அப்போதைய தேசிய உளவுச் சேவையின் தலைவர் செய்த தவறு. சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உளவுச் சேவை பிரதனி, அதன் பாரதூரத்தன்மை தொடர்பில் அறிவித்திருக்க வேண்டும். 

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதென கூறப்படும் தகவல், நான் பதவி வகித்த காலப்பகுதியில் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து கிடைக்கவில்லை. ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட சஹரான் ஹாஷிம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் குழு கூட்டங்களின் போது, எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அந்தக் கூட்டங்களின்போது வெளிநாட்டு எச்சரிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன தயக்கம் காட்டினார் என முன்னாள் பபாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது சாட்சியத்தில் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment