ரஷிய எதிர்க்கட்சி தலைவர் கோமாவில் இருந்து மீண்டார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் கோமாவில் இருந்து மீண்டார்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி கோமாவில் இருந்து மீண்டார் - ஜெர்மனி  மருத்துவமனை தகவல் || Alexei Navalny out of artificial coma after Novichok  poisoning
நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றிருந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக ஜெர்மனி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது  நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், நவல்னி தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும், அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவந்த பெர்லின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாய் மொழியால் கேட்கப்படும் கேள்விகளை அவர் உணர்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவல்னியின் உடலில் கலந்துள்ள நோவிசோக் நச்சு விஷம் எந்த அளவிற்கு நீண்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போதைய நிலைமையில் கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment