பேஸ்புக்கில் முஹம்மது நபியை அவமதித்ததாக முஸ்லிம் பெரும்பான்மை நாடான பங்களாதேஷில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் உத்தியோகபூர்வமாக ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தபோதும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் சமூகத் தடைக்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது. இது தொடர்பில் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஒரு காவல் அதிகாரியாக இருக்கும் ஜிபோன் கிறிஷ்னா ரோய் என்பவர் பேஸ்புக்கில் “முஹம்மது நபி பற்றி ஆபாசமான, அவதூறான மற்றும் ஏற்க முடியாத கருத்துகளை வெளியிட்டார்” என்று அரச வழங்கறிஞர் நஸ்ருல் இஸ்லாம் ஷஹிம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சர்ச்சைக்குரிய இணையத்தளம் தொடர்பான சட்டத்தின் கீழே இவருக்கு கடந்த புதன்கிழமை இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மற்றொரு ஹிந்து ஆடவர் ஒருவர் பேஸ்புக்கில் இட்ட பதிவை அடுத்து பெரும் ஆர்ப்பாட்டம் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமடைந்தனர்.
வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவர் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.
No comments:
Post a Comment