(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
20 ஆவது திருத்தத்தில் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும். அதற்காகவே 19 ஆம் திருத்தத்துக்கும் நாங்கள் ஆதரவளித்தோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் வாக்குறுதியை மீறினார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் புதிய அரசியமைப்பொன்றை கோரியிருந்தனர். அதற்கான பின்புலத்தை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். விசேட நிபுணர் குழுவொன்றும் அமைகக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலே தற்காலிக ஏற்பாடாக 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன் 13,17,18,19 ஆவது திருத்தச் சட்டங்களில் உள்ள நல்ல விடயங்கள் 20 ஆவது திருத்தத்தில் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்.
அதேபோன்று தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும். தற்போதைய தேர்தல் முறைமையால் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதுடன், கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன.
அத்துடன் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதியளித்ததனாலே நாங்கள் அன்று 19 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் அவர்கள் வாக்குறுதியை மீறினார்கள்.
எனவே 20 ஆவது திருத்தச் சட்டம் தற்காலிகமானதாகும். அதனால் விமர்சிப்பதைவிடுத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment