கோப் குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செலுத்துகிறது - சாராவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் : காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

கோப் குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செலுத்துகிறது - சாராவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் : காவிந்த ஜயவர்தன

(செ.தேன்மொழி) 

கோப்குழுவின் தலைவராக கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்பட்டிருந்த போதும், தற்போதைய அரசாங்கம் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரையே தெரிவு செய்துள்ளது. இந்த கோப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும் தற்போது அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவசியம் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார். 

மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாங்கமாக தங்களை அடையாளம் படுத்திக்கொண்ட ஆளும் தரப்பினர், மக்களின் எண்ணங்களுக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிமுறை எவ்வாறு காணப்பட்டதோ, அவ்வாறே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது. 

தற்போது ஆளும் தரப்பினர் எவ்வாறான குற்றங்களைச் செய்தாலும் அவர்கள் பாதுக்காக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோப் குழு போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டிய குழுவின் செயற்பாடுகளிலும் அரசாங்கம் தலையீடு செலுத்தி வருகின்றது. 

கடந்த காலத்தில் கோப் குழுவின் தலைவரான எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கே அந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்த நியமனத்தை லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸவிதாரனவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? 

இதேவேளை, கோப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக்கூடிய நிலைமைகள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த நிலைமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. ஏன் அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது? 

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக கணக்காய்வு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை நீக்குவதற்கு எடுத்துள்ள முயற்சி மக்கள் மீதான அன்பின் காரணமாகவா? அல்லது கொள்ளையிடுவதற்காகவா? என்பதையும் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். 

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அதனை மறைப்பதற்காக 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக தங்களை அடையாம் படுத்திக் கொண்ட ஆளுந்தரப்பினர், அதற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதுடன், இதன்போது கடமையை தவரவிட்ட அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவது போன்று, இந்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சாரா என்ற பெண்ணை கைது செய்து விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்று கூறுவது நியாயமற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதேவேளை அடிப்படைவாதிகளை முஸ்லீம், தமிழ் மற்றும் சிங்களம் என்று பாராது, இவ்வாறு அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதுடன், இதன்போது கடமையை தவரவிட்ட அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவது போன்று, இந்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சாரா என்ற பெண்ணை கைது செய்து விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment