நியூ டயமண்ட் கப்பல் கப்டன் உள்ளிட்ட குழுவினரின் வாக்குமூலங்கள் இன்று நீதிவானுக்கு சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

நியூ டயமண்ட் கப்பல் கப்டன் உள்ளிட்ட குழுவினரின் வாக்குமூலங்கள் இன்று நீதிவானுக்கு சமர்ப்பிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்) 

குவைத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா, பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல், பானம - சங்கமன் கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்கு உள்ளானதாக அறியப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அமரசிங்க தலைமையிலான சிறப்புக் குழு, காலிக்கு சென்று, நியூ டயமண்ட் கப்பலின் கப்டனிடம் நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் பதிவு செய்தது. 

காலி தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் உள்ள குறித்த கப்பல் கப்டனிடம் நீண்ட வாக்கு மூலம் ஒன்றினை சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் அக்கப்பலின் பணியாளர்களாக இருந்த கிரேக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் தற்சமயம் காலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகளை சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு ஆரம்பித்துள்ளது. 

கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் பெற்றுக் கொண்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் ஆரம்ப்பிக்கப்ப்ட்டுள்ளன. 

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் இரவு, கப்பல் கப்டனிடம் பெற்றுக் கொண்ட விஷேட வாக்கு மூலத்தில் உள்ள விடயங்களை, இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு சமர்ப்பித்து, மேலதிக விசாரணை தொடர்பில் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்ச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். 

குவைத் மினா அல் அஹமதி துறைமுகத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா, பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல், பாணம - சங்கமன் கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி காலை வேளையில் தீ விபத்துக்கு உள்ளானதாக தெரியவந்தது. 

இந்த வணிக கப்பல் தீ பரவலுக்கு உள்ளாகும் போது, அதில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் தொன் கனிய எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அதாவது 270 மில்லியன் கிலோ கனிய எண்ணெய் அக்கப்பலில் இருந்துள்ளது. இதனைவிட கப்பலின் எரிபொருள் தேவைக்காக 1700 மெட்ரிக் தொன் எரிபொருளும் இருந்துள்ளது. 

இந்நிலையில் நியூ டயமண்ட் கப்பல் அனர்த்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்ததா, அங்கு வேறு குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என அவதானம் செலுத்தியும், இதனால் இலங்கையின் கடற் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும் 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் 25,26,38 மற்றும் 53 ஆம் அத்தியாய்ங்களின் கீழ் குற்றங்கள் நிகந்துள்ளதா என சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயம் பிரகாரம், விசாரணை அதிகாரம், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அமரசிங்க உள்ளிட்ட சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது அது குறித்த நடவடிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினதும் வழி நடாத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதன் ஆரம்ப கட்டமாக, இந்த விடயம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 128 (3) ஆம் அத்தியாயம் பிரகாரம் நீதிமன்ற அதிகாரத்தை உறுதி செய்து, கொழும்பு பிரதான நீதிவானுக்கு சி.ஐ.டி. முதல் தகவல் அறிக்கையினை தாக்கல் செய்த நிலையில், கப்பலின் வி.டி.ஆர். பதிவுகளை பெறவும், கனிய எண்ணெய் மாதிரிகளை சேகரிக்கவும், கப்பல் கப்டன் உள்ளிட்ட ஊழியர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யவும் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டது. 

அதன் பிரகாரமே முதற்கட்டமாக கப்பல் கப்டனிடமும் மேலும் சிலரிடமும் சி.ஐ.டி. வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் சிறப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment