பாராளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Friday, September 11, 2020

பாராளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றம்

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரம் முதல் பாராளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றம் செய்ய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இடம்பெறவுள்ளன. பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். 

செப்டெம்பர் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களின் கீழ் முன்வைக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான 12 கட்டளைகளும், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகளும், 02 கட்டளைகளும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 31 கட்டளைகளும் எதிர்வரும் 22 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 

அத்துடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான வாய் மூல விடைக்கான கேள்விகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 வரையான காலம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர், எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் சபாநாயகரினால் நேற்று முற்பகல் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை மற்றும் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை என்பன விவாதிக்கப்படவுள்ளன. 

எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சுரங்கனி எல்லாவல மற்றும் ஆர்.எம்.பி.ரத்னாயக்க ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷமன் கிரியல்ல மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க, அல் சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், கஜயந்த கருணாதில, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad