43 ஊழியர்கள், ஆராயிரம் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது - தலைமை அதிகாரி கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டார் - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

43 ஊழியர்கள், ஆராயிரம் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது - தலைமை அதிகாரி கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டார்

ஜப்பானில் ‘மேசக்’ புயல்  - கால்நடைகளை ஏற்றி சென்ற துபாய் கப்பல் கடலில் மூழ்கியது - ஒருவர் பலி
ஜப்பானில் ‘மேசக்’ புயல் காரணமாக கால்நடைகளை ஏற்றி சென்ற துபாய் கப்பல் சீன கடலில் மூழ்கியது. இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒருவர் பலியானார்.

துபாயில் பதிவு செய்யப்பட்ட ‘கல்ப் லைவ் ஸ்டாக்-1’ என்ற கப்பல் நியூசிலாந்து நாட்டின் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவின் டாங்ஷான் நகரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 43 கப்பல் ஊழியர்கள் மற்றும் 6 ஆயிரம் கால்நடைகள் இருந்துள்ளன.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கிழக்கு சீன கடலில் ‘மேசக்’ என்ற பலத்த புயல் வீசியது. அந்த நேரத்தில் மணிக்கு 210 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. வரலாறு காணாத அளவில் புயலும், காற்றும் பதிவானது. இதுபோன்ற புயல் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் பதிவானது என்று ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. 

இதற்கிடையே கால்நடைகளை ஏற்றி சென்ற துபாய் கப்பலில் புயல் காரணமாக என்ஜின் நின்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கப்பல் சேதமடைந்து மூழ்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது என அங்கு இருந்து வந்த அவசர தகவல்களின் மூலம் உதவி கோரப்பட்டது.

தகவலை பெற்றுக் கொண்ட ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சேதமடைந்த கப்பலில் உள்ள ஊழியர்களை தேடும் பணி தொடங்கியது. ஆனால் கடும் புயல் காரணமாக ஊழியர்களை தேடும் பணி தாமதமானது.

இந்த நிலையில் சூறாவளி புயல் சற்று குறைந்ததை தொடர்ந்து மீண்டும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் விமானம் மூலம் தேடப்பட்டதில் அந்த கப்பலின் தலைமை அதிகாரி கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை மீட்டு கடற்படை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயக்கமான நிலையில் ஒரு ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்டு வந்து சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று அந்த கப்பலில் இருந்து தப்பித்து மிதவையில் மிதந்து வந்துகொண்டிருந்த கப்பல் ஊழியரை ஜப்பான் நாட்டு கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து மீட்பு படகுகள், விமானங்கள், நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் தெற்கு ஜப்பானின் அமாமி ஒஷிமா தீவு பகுதி அருகே மற்ற ஊழியர்கள் மற்றும் கப்பலை தேடி வருகின்றனர். அந்த கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 39 பேரும், அவஸ்ஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேரும், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேரும் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad