அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் திகதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன.
தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சியில் 50 திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. ஆனால், கரை ஒதுங்கிய மொத்த திமிங்கலங்களில் இதுவரை 360 திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன என்று மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
மேலும், 30 திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் கரையிலேயே இருப்பதாகவும், அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகமும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திமிங்கலங்கள் கூட்டமாக செல்லும்போது அவற்றை முன் நின்று அலைத்து செல்லும் தலைமை திமிங்கலங்கள் வழி தவறி அனைத்து திமிங்கலங்களையும் எதிர்பாராத கரைப்பகுதிக்கு அழைத்து வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆனாலும், மிகப்பெரிய கூட்டமாக 460 திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய நிகழ்வு அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே இதுதான் முதல் முறை எனவும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை திமிங்கிலங்கள் 23 அடி நீளத்திற்கு வளரும் என்பதோடு 3 தொன் எடை வரை இருக்கும். டஸ்மேனிய மாநிலத் தலைநகர் ஹோபார்டில் இருந்து சுமார் 200 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த திமிங்கிலங்கள் நிர்க்கதியான நிலையில் சிக்கியுள்ளன.
இது நவீன அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சம்பவம் என்பதோடு உலகில் மிகப் பெரிய சம்பவங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனினும் இவ்வாறு திமிங்கிலங்கள் கூட்டமாக வந்து சிக்கிக் கொள்ளும் நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு மத்தியில் மர்மமாக உள்ளது.
No comments:
Post a Comment