திலீபன் நினைவேந்தல் தடை விவகாரம் - நீடிப்பா? நீக்கமா? 24 இல் நீதிமன்றம் தீர்ப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

திலீபன் நினைவேந்தல் தடை விவகாரம் - நீடிப்பா? நீக்கமா? 24 இல் நீதிமன்றம் தீர்ப்பு

திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற உத்தரவு நாளைமறுதினம் 24ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான உத்தரவை நாளைமறுதினம் வழங்குவதென யாழ் நீதவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு அமைய நீதிமன்றம் மேற்படி நினைவேந்தலுக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது.

இந்நிலையில், திலீபன் நினைவேந்தலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பொலிஸாரின் வாதத்துக்கு ஏற்றபடியான சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்கவில்லையென இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொலிஸாரின் கடும் ஆட்சேபனையுடனான விண்ணப்பம் நீதிமன்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும் நேற்றைய தினம் முன்னிலையாகாத எதிர்மனுதாரர்கள் தரப்பு இன்று நகர்த்தல் பத்திரம் இணைத்து வழக்கை மீள அழைத்து, பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவைக்கு எதிராக தமது கடும் ஆட்சேபனையை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய இம்மனுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஷ்ணுகாந்த் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

திலீபன் நினைவேந்தல் நடத்துவதன் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுக் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸாரால் ஏற்கனவே பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டது. பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் நீதிமன்றில் நேற்று முன்னிலையாவதற்கு அழைப்புக் கட்டளை சேர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார். யாழ்ப்பாணம் மாநகர சபை சார்பில் வழக்கின் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அவை கிடைக்காக நிலையில் மறு தவணை ஒன்றை வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சட்டத்தரணி கோரினார்.

அத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர். திலீபன், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்தது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் நிருபர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad