ஏப்ரல் 21 தாக்குதல் எச்சரிக்கைகள் பாரதூரமானவை என அறிவித்திருக்க வேண்டும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் கருத்தையும் நிராகரித்தார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் எச்சரிக்கைகள் பாரதூரமானவை என அறிவித்திருக்க வேண்டும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் கருத்தையும் நிராகரித்தார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என, அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவித்திருக்க வேண்டும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று மீண்டும் சாட்சியமளித்தபோது அவர் இதனைக் கூறினார்.

வௌிநாட்டு புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கை ஊடாக, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டது எனவும், தாக்குதல் நடத்தப்படும் என உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இன்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைகளின் பாரதூரத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதியான தகவல்களை வழங்காது, எச்சரிக்கை உள்ளதென மாத்திரம் குறிப்பிட்டமை, அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் செய்த தவறென, ஹேமசிறி பெர்ணான்டோ கூறினார்.

சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, புலனாய்வுப் பிரிவின் தலைவர், அதன் பாரதூரத்தன்மை தொடர்பில் அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதெனக் கூறப்படும் தகவல், தாம் பதவி வகித்த காலப்பகுதியில் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லவில் புத்தல் சிலை சேதமாக்கப்பட்டமை, வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து தாம் கண்காணிக்கவில்லை எனவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே வெடிபொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை, இந்த சம்பவங்களின் மூலம், தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அது நாட்டிற்கே ஆபத்தான நிலைமை எனவும், ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்டார்.

ஏப்பர் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளங் காணப்பட்ட சஹரான் ஹாஷிம் தொடர்பில், தேசிய பாதுகாப்புப் பேரவை, எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும், அந்தக் கூட்டங்களின்போது வௌிநாட்டு எச்சரிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் தயக்கம் காட்டியதாகவும், ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார்.

இதேவேளை, தாம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இன்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று தெரிவித்த கருத்தை நிராகரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை மூலம் தமது சேவை பெறுநர் அச்சமடைந்துள்ளதாக, ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியாளரிடம் குறுக்குக் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பத்தைக் கோராமல், அறிக்கை மூலம் குற்றச்சாட்டை நிராகரிப்பது ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பொருட்படுத்தாத நிலைமையாகும் என, ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி கூறினார்.

அறிக்கையை வௌியிட்ட, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரை ஆணைக்குழுவிற்கு அழைத்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடவில்லை என்பதை தௌிவுபடுத்துவதற்கான காரணத்தை வினவுமாறு சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை தொடர்பில் தாம் அறியவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரித் குணரத்ன தெரிவித்தார். தமது சேவை பெறுநரால், அது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவில் நாளை விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு ஆணைக்குழு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad