உலகின் துரித வளர்ச்சி கண்ட நாடுகளின் தலைவர் அனைவருமே சர்வாதிகாரத்தை கையில் எடுத்தனர், எனவே 20 இன் மூலமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

உலகின் துரித வளர்ச்சி கண்ட நாடுகளின் தலைவர் அனைவருமே சர்வாதிகாரத்தை கையில் எடுத்தனர், எனவே 20 இன் மூலமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

உலகின் துரித வளர்ச்சி கண்ட நாடுகளின் தலைவர் அனைவருமே சர்வாதிகாரத்தை கையில் எடுத்தே வெற்றி கண்டனர். எனவே இப்பொது அரசாங்கம் கொண்டுவரும் 20 ஆம் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டியுள்ளது என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக சபையில் தெரிவித்தார். 

நிதி அறிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை சபையில் முன்னெடுக்கப்பட்ட வேளையில் அதில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், இன்று நாடாக நாம் பின்னோக்கி பயணித்துக் கொண்டுள்ளோம். கடந்த நல்லாட்சி மிகவும் மோசமான ஆட்சியை எமக்கு கொடுத்து சென்றுள்ளது. இவற்றை நாம் மாற்றியமைத்து வருகின்றோம். பல திருத்தங்களை கொண்டுவந்து மாற்றத்தை உருவாக்கி வருகின்றோம். 

ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட பின்னரே நாடாக நாம் பாரிய வீழ்ச்சி கண்டோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு கடன் அதிகரித்தது. ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டது. பொருளாதார வளர்ச்சி வீதம் மோசமாக வீழ்ச்சி கண்டது. தனி நபர் வருமானம் மந்தமடைந்தது, கடனுக்கான வட்டியும் அதிகரித்தது. இந்நிலையில் மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. பயங்கரவாதம் மீண்டும் உருவாகியது. இது அனைத்திற்கும் 19 ஆம் திருத்தமே காரணமாகும். 

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சபாநாயகருக்கும் இடையில் எப்போதுமே முரண்பாடுகளே காணப்பட்டது. ஜனாதிபதி ஒரு தீர்மானமும் பிரதமர் மாற்று தீர்மானமும் எடுத்தமை நாட்டின் ஏனைய துறைகளை நாசமாக்கியது. 

இதற்கு முன்னர் நாட்டின் யுத்தம், பொருளாதார நெருக்கடிகள் இருந்தும் 2004-2015 ஆட்சியில் அபிவிருத்தி துரிதமடைந்தது. மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. எந்தவொரு ஜனதிபதியினாளும் முடியாது இருந்த பயங்கரவாதத்தை ராஜபக்ஷ ஆட்சியில் முடிவுக்கு கொண்டுவந்தோம். அத்தடை அடுத்து வடக்கு கிழக்கு மீட்சி பெற்றது. 

பின்னர் நல்லாட்சி மீண்டும் நாட்டினை நாசமாக்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆம் திருத்தம் மூலமாக நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டது. அதனை மாற்றியமைக்கவே நாம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த நினைக்கின்றோம். 

உலகில் பொருளாதார ரீதியில் துரிதமாக வளர்ச்சி கண்ட நாடுகளை நாம் எடுத்துக் கொண்டால் சிங்கபூர் தலைவர் லீ குவன் யூ, மலேசிய தலைவர் மகாதீர் மொகமட், தென் கோரிய தலைவர் ஜெனரல் பார்க், சூழ்ச்சி மூலமாக ஆட்சியை கைப்பற்றியவர், மாவோ சேதுங் ஆகியோர் தமது நாடுகளை வளர்ச்சியடைய செய்ய சர்வாதிகாரத்தை கையாண்டனர். 

எனவே இலங்கையும் துரிதமாக வளர்ச்சியடைய 20 ஆம் திருத்தம் அவசியம், அதன் மூலமாக நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்தி ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம். அதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும்.

No comments:

Post a Comment