20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக 5 பேரை கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரை கொண்ட குழு 20ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பாக பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தொன்னகோன் உள்ளிட்ட பலர் விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இன்றையதினம் (25) மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 18 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment