
13 ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பதை ஏற்க முடியாது. எனவும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை தொடர வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பான விவகாரத்தை பேசி தீர்க்க முடியும் எனவும் அரசியலமைப்பை கட்டம் கட்டமாக மாற்றாது புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.
இந்தியாவின் தலையீட்டினால் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அதன் நோக்கம் இன்னும் மாறவில்லை எனவும் அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் பொதுஜன பெரமுன கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டி.யூ.குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஆளும் தரப்பிலுள்ள சிலர் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினாலும் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனை கொண்டு வர எதிரணியில் இருந்து வாக்களித்த ஒரே எம்.பி. நான்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இது முன்வைக்கப்பட்டது. இது முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் அதன் நோக்கம் முக்கியமானது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியும்.
இந்த திருத்தத்தின் பின்னணியை சிந்திக்க வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலும் 13 ஆவது திருத்தத்தை திருத்த யோசனை முன்வைக்கப்பட்ட போது நான் உட்பட இடதுசாரி கொள்கையுள்ள அமைச்சர்கள் அதனை எதிர்த்தார்கள். நாம் அமைச்சரவையில் இல்லாத போதும் பக்காளிக் கட்சி என்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்க குரல் கொடுப்போம்.
19 ஆவது திருத்தத்தில் உள்ள குழப்ப நிலை காரணமாக துரிதமாக அதனை மாற்ற அரசாங்கம் தயாராகிறது. 20 ஆவது திருத்தத்தை கொண்டுவரும் உடன்பாட்டுடனே கடந்த அரசில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியை மீறி ஏமாற்றினார். 19 ஆவது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment