சமுர்த்தி நிவாரணத்தை நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

சமுர்த்தி நிவாரணத்தை நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய பணிப்பு

பலமான தேசிய பொருளாதாரத்தை ...
சமுர்த்தி நிவாரணத்தை நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுங்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  பணிப்புரை விடுத்தார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். அதனால் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  தெரிவித்தார்.

அனைத்து குடும்பங்களினதும் வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தின் வளர்ச்சி மக்கள் மைய பொருளாதாரத்தை மேம்படுத்தல் என்ற விடயங்களை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  இவ்வாறு குறிப்பிட்டார்.

சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் செலவிடப்படும் தொகை 50,000 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும். சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அங்கு உரிய பின்னூட்டலின் அவசியத்தையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  தெளிவுபடுத்தினார்.

வலுவூட்டப்பட்ட சமுர்த்தி பயனாளிகளை சமுர்த்தி செயற்திட்டத்தில் உள்வாங்கி நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வழிமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். நுண்நிதி கடன்கள் மூலம் பிரதிபலனை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல் அவசியம். நிதி இயலுமை குறித்து விளங்கிக் கொள்வது நுண்நிதி நிறுவனங்களின் மிக முக்கிய பணியாகும்.

சமூக மாற்றத்துக்கு மக்கள் மத்தியில் உத்வேகம் தோன்றியிருக்கும் இந்நேரத்தை வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 போன்ற சவால்மிக்க நிலைக்கு முகங்கொடுத்த மக்களுக்கு தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிகள் சலுகை வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ், இதன் மூலமே மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

”சமுர்த்தி” நிவாரணத்தை உண்மையாகவே பெறவேண்டியவர்களை இனங்காண்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். நுண்நிதிக் கடன் பிரச்சினையாக மாறி இருப்பதாகவும், கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சட்டம் அல்லது வேறு சட்டங்கள் மூலமோ அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்கள்.

எனது முக்கிய எதிர்பார்ப்பாகிய காணி உரிமையை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பெஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தெங்கு, மா, பலா போன்ற பயிர்ச் செய்கைளை ஆரம்பித்து மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்   குறிப்பிட்டார். வனஜீவராசிகள், மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை மீண்டும் பிரதேச செயலகங்கள் கீழ் கொண்டுவந்து மக்களுக்கு உரிய உரிமையை உடனடியாக வழங்குவது பற்றியும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெஸில் ராஜபக்ஷ , இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுக்குரிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் வங்கி துறையை பிரதிநிதித்துவம் செய்து அதன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment