செப்டம்பருக்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் - டிக்டொக்கிற்கு கெடு விதித்த டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

செப்டம்பருக்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் - டிக்டொக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்

டிக்டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க - சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. 

மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. 

ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டொக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் டிக்டொக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டொக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

டிக்டொக் செயலியின் அமெரிக்க உரிமம் விற்பனைக்கு வருவதால் அதை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டிக்டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டொக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது டிக்டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசொப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். 

இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக்டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசொப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

டிக்டொக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதை விட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான்.

அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டொக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டொக்க்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment