சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதற்கான தைரியத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பெறலாம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதற்கான தைரியத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பெறலாம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

இலங்கை தட்டிக்கழிக்கும் வகையில் ...
(நா.தனுஜா)

ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான கொள்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படுவதுடன், போர் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நீதி கோருவோர் அடக்கு முறைக்கு உட்படுத்தப்படலாம் என்ற கரிசனையையும் சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளைப் புறக்கணித்து செயலாற்றுவதற்கான தைரியத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பையும் அண்மையில் வெளிவந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிகப்படுத்தியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அத்தோடு இத்தகைதொரு நெருக்கடி நிலையைக் கையாளத்தக்க வகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி வழங்கல் கட்டமைப்புக்கள் உள்ளடங்கலான இலங்கையின் சர்வதேச பங்காளிகள் தமது கொள்கைகளை திருத்த வேண்டும் என்பதுடன், தமது உதவிகளினால் உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள் பயனடையாதிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியிருக்கிறது.

2020 ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியிருக்கும் நிலையில், இந்த வெற்றி மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் சட்டத்தரணிகள், விமர்சகர்கள் சார்ந்து பல்வேறு கரிசனைகளை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று சனிக்கிழமை நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்போர் ஆகியோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அடக்கும் வகையிலான பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றார். 

கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட கொலை மிரட்டல்கள், தாக்குதல்கள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் அடங்கலாக உயர்மட்ட இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் மிகவும் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் 2020 ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்தினால் இன, மத சிறுபான்மையினருக்கு விரோதமான கொள்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம், 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட 26 வருட காலப் போரின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர் குற்றச் சாட்டுக்களுக்காக நீதி கோருவோர் அடக்கப்படலாம் என்றவாறான அக்கறைகளை இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன. 

கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்கலை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரசாங்கங்கள் - தற்போதைய சூழ்நிலையில் நீதி கோருபவர்களை இலக்கு வைப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

'முன்னர் ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது நிலவிய அடக்குமுறை கலாசாரத்தை நோக்கி தற்போதைய ஜனாதிபதி விரைவாகக் கடிகாரத்தைத் திருப்ப முனைகின்றார்' என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியிருக்கிறார். 

'சர்வதேச நாடுகள் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்றும் மீண்டும் புதுப்பிக்கப்படும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அவை குரல் எழுப்பும் என்றும் இலங்கை அரசாங்கம் உணர வேண்டும்' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னர் சிவில் அதிகாரிகளினால் தலைமை தாங்கப்பட்ட அரச கட்டமைப்புக்களுக்கு தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்தல், விசேட ஜனாதிபதி செயலணிகளை உருவாக்கல் ஆகியவற்றின் ஊடாக ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவத்தின் பங்களிப்பை வெகுவாக விரிவுபடுத்தி வருகின்றது.

ஒழுக்கமானதும் பாதுகாப்பானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விசேட ஜனாதிபதி செயலணி முழுவதுமாக இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கியதாக இருப்பதுடன், அது அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கக்கூயெ அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. 

பொலிஸ், சிவில் சமூக அமைப்புக்களை ஒழுங்குபடுத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகங்கள் உள்ளிட்ட 30 இற்கும் அதிகமான அரச கட்டமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சு ஏற்று செயற்பட்ட போதிலும், குறித்தவொரு இன அல்லது மத சமூகத்தை இலக்கு வைத்தல், அடக்கு முறைக்கு உட்படுத்தல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான கடப்பாட்டில் தோல்வி கண்டிருக்கிறது. 

மிகவும் குறுகிய - இரு மாத காலத்திற்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 66,000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வட மாகாணத்தில் சோதனைச் சாவடிகள் உள்ளடங்கலாகப் பாதுகாப்புப் பிரிவினரின் பிரசன்னம் கடுமையாக்கப்பட்டது. இவ்வாறு சோதனைச் சாவடிகளின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டமை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், 'இது எவ்வாறு வைரஸை கட்டுப்படுத்தும்?' என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

அத்தோடு தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் செயற்பாடு சுகாதாரப் பிரிவினராலன்றி, புலனாய்வுத் துறையினராலேயே மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு 'இரகசியத்தன்மை' என்பது இல்லாது போகின்றது. இத்தகைய நடைமுறைகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

யார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பினும், தொற்றாளரின் தனிப்பட்ட இரகசியத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. 

ஒரு தொற்று நோயைப் பயன்படுத்தி கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் விமர்சகர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கண்டித்திருந்தமை முக்கியமானதாகும்.

இது விடயத்தில் அரச அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பொலிஸார் அறிவித்தனர். 

அதேபோன்று தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்த சமூகவலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரசீக் கைது செய்யப்பட்டதுடன், நான்கு மாதங்கள் கடந்தும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இது 'விமர்சகர்களுக்கு' மிகவும் அச்சுறுத்தல் மிக்கதொரு சூழலாக மாறியிருக்கிறது என்று சிவில் சமூக செயற்பாட்டாளரொருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மீது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறையின் காரணமாக அதிகளவானோர் தற்போது 'அமைதியாகி' இருக்கின்றார்கள் என்று வட மாகாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். 

அதேபோன்று மற்றொரு செயற்பாட்டாளர் 'எம்மில் பலர் எமது தொழிலைச் செய்வதற்கும், அரசாங்கத்தை சவாலுக்குட்படுத்துவதற்கும் அஞ்சுகின்றோம்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய - போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பணியாற்றும் அமைப்பொன்று கடந்த மே மாதத்தில் பிற்பகுதியில் தன்னைப் புலனாய்வு அதிகாரியென்று அடையாளப்படுத்திக் கொண்ட நபரால் ஏழு தடவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது. 

அதேபோன்று மேலும் பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் புலனாய்வுத் துறை முகவர்கள் தமது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வருகை தருவதாகவும் தொலைபேசி அழைப்பின் ஊடாக அச்சுறுத்தல் விடுப்பதாகவும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளாக பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த 2005 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போர்க் குற்றங்கள் மற்றும் வேறுபல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.

அவர்களில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதை முன்நிறுத்தி செயற்படுவோர் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றார்கள். அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அரசாங்கம் தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்திருக்கின்றது.

பொலிஸ் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். தற்போதை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்புபட்டிருக்கக் கூடிய மிக முக்கிய வழக்கு விசாரணைகளின் அவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று மற்றுமொரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிஷாந்த சில்வாவும் கடந்த கால ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டுவந்தார் என்பதுடன், கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலையடுத்து அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்.

மேலும் பல்வேறு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் தாமாகவே செய்திகளை சுய தணிக்கை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 

இத்தகைய அச்சம் காரணமாக அண்மைய மாதங்களில் இரண்டு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்திருக்கிறது. அவர்களில் 'சன்டே ஒப்சேவர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளருமான தரிஷா பாஸ்டியனும் ஒருவராவார்.

அதேபோன்று மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மிகக்கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதுமாத்திரமன்றி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட முன்னதாக சுமார் 90 இற்கும் அதிகமான நாட்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராகப் பொய்யான பயங்கரவாதக் குற்றச் சாட்டுக்களை முன்வைக்குமாறு பொலிஸார் தம்மைக் கட்டாயப்படுத்த முயன்றதாக மூன்று சிறுவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

அடுத்ததாக கடந்த ஜுன் மாதம் 10 ஆம் திகதி அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக 'பிளக் லிவ்ஸ் மேட்டர்ஸ்' போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்துக் கேள்வியெழுப்பிய சுவஸ்திகா அருலிங்கம் என்ற சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரின் சார்பில் செயற்பட்டுவரும் சட்டத்தரணியான அச்சலா செனெவிரத்னவிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்பட்டுவந்த சட்டத்தரணியும் யாழ்ப்பல்கலைக்கழக விரிவுரையாளருமான குமார வடிவேல் குருபரன், இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இராணுவத்தினால் இடையிட்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் காரணமாக தனது துறைசார் பதவியிலிருந்து விலகுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்.

எனவே தற்போதைய பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள், சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளைப் புறக்கணித்து செயலாற்றுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்திற்குத் தைரியத்தை வழங்கும் என்ற கரிசனையை ஏற்படுத்தியிருக்கின்றன. 

இத்தகைதொரு நெருக்கடி நிலையைக் கையாளத்தக்க வகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி வழங்கல் நிறுவனங்கள் உள்ளடங்கலான இலங்கையின் சர்வதேச பங்காளிகள் தமது கொள்கைகளை திருத்த வேண்டும் என்பதுடன், தமது உதவிகளினால் உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள் பயனடையாதிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியிருக்கிறார்.

No comments:

Post a Comment