
(இராஜதுரை ஹஷான்)
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு (அபேஜன பல பக்ஷ) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் ஆசனம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கே வழங்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சமன் பெரேரா, பாராளுமன்றத்தில் ஞானசார தேரர் பௌத்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ள 67 ஆயிரம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு அத்துரலியே ரத்ன தேரர் எமது கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது எனவும் பொதுச் செயலாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌத்த மத உரிமை, நாட்டின் இறையான்மை ஆகியவை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானாசார தேரர் குரல் கொடுத்தார். பாராளுமன்றத்திற்கு இவர் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. இதன் பின்னணியிலே இவர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்கல் நான்கு மாகாணங்களில் இரத்து செய்யப்பட்டன. 17 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 67 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றியுள்ளோம். இதற்கமைய எமது கட்சிக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.
ஞானசார தேரர் தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகுவதற்கு சட்ட சிக்கல் காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், தேர்தலில் போட்டியிட முன்னர் தேசியப் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்பட்டு அது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
கட்சியின் செயற்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம். காணப்படும் சட்ட சிக்கலை முறையாக வெற்றி கொண்டு ஞானசார தேரரை நிச்சயம் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம்.
அத்துரலியே ரத்ன தேரர் எங்கள் மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தேசியப் பட்டியல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரருக்கு தேசியப் பட்டியலில் ஒதுக்கட்டுள்ள ஆசனத்தை வழங்கவே தீர்மானித்துள்ளது. என்றார்.
No comments:
Post a Comment