
(ஆர்.ராம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை பொதுத் தேர்தலில் 9 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு ஒரு தேசியப் பட்டியல் ஒதுக்கீட்டு ஆசனமும் கிடைத்துள்ளது. இந்த ஆசனத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டிற்கு படையெடுத்துள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையின் தலைவரும், வட மாகாண சபையின் தவிசாளருமான சி.வி.கே.சிவஞானம் திருகோணமலைக்குச் சென்று சம்பந்தனிடம் நேரடிக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதேநேரம், விருப்பு வாக்குகள் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் கட்சிக்கு பெரும் தாக்கத்தினை அடுத்து வரும் காலப்பகுதியில் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவும், தென்மராட்சிக்கான பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றது என்ற விமர்சனத்தினை தவிர்ப்பதற்காகவும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜுக்கே தேசியப் பட்டியல் ஆசனத்தினை வழங்குவதற்கு தமிழரசுக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் சிந்தித்து வருகின்றனர்.
அத்துடன் நேற்று மலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவுக்கும், சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த ஸ்ரீநேசன், உதயகுமார், தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் சார்பானவர்களும் சம்பந்தனிடத்தில் தேசியப் பட்டியலுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அதேநேரம், அம்பாறை மாவட்டத்திற்கான தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. எனினும் கோடீஸ்வரனுக்கு வழங்குவதா இல்லை கலையரசனுக்கு வழங்குவதா என்பதிலும் வாதப்பிரதிவாதங்கள் நீடிக்கின்றன.
இதேவேளை, ஏற்கனவே சம்பந்தனின் தெரிவாக இருக்கும் குகதாஸனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தினைவ வழங்குவதோடு கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதித்துவத்தினை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இல்லாமில்லை. மறுபக்கத்தில் பெண் பிரதிநிதித்துவம் கூட்டமைப்பினுள் அவசியம் என்ற அடிப்படையிலான கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஏற்கனவே தேசியப் பட்டியலில் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குருநாதனுக்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டும் என்ற அழுத்தங்களும் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது அத்தரப்புக்களின் கோரிக்கைகளும் வெகுவாக வலுப்பெற்றுள்ளன.
இவற்றுக்கு நடுவே பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன தாம் அங்கீகாரிக்கும் நபருக்கே தேசியப் பட்டியல் ஆசனத்தினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சம்பந்தனிடத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க, பலர் பலவிதமான யோசனைகளை, கோரிக்கைகளை செய்கின்றார்கள். அந்த கருமத்தினை (தேசியப் பட்டியல் விவகாரத்தினை) பக்குவமான கையாள வேண்டும். இன்னமும் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment