கல்வி, தொழில்நுட்பம், தொழிற் பயிற்சி துறைகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவும் - கல்வி அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

கல்வி, தொழில்நுட்பம், தொழிற் பயிற்சி துறைகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவும் - கல்வி அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி

இலங்கையில் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற் பயிற்சி துறைகளில் பயிற்சிகளை வழங்குவதற்கும் அத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய அரசாங்கம் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமென இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே இந்திய உயர்ஸ்தானிகர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, கல்வி அமைச்சின் செயலாளர் கே.கே.சி.கே. பெரேரா உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், இந்தியா தற்போது மகாத்மா காந்தி புலமைப்பரிசில் திட்டம் உட்பட கல்வித்துறை அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. 

நாட்டின் கல்வித்துறையின் முக்கியம் வாய்ந்த துறைகளை இனங்கண்டு முன்வைத்தால் எதிர்காலத்தில் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையின் தொழில் வாய்ப்பு சந்தை மற்றும் தொழிற் கல்வி ஆகியவற்றுக்கிடையில் பொருத்தமின்மை காணப்படுகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

தற்போது தொழிற் கல்வியை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் சம்பிரதாய கல்வி முறையையே வழங்கி வருகின்றன. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கற்றல் முறைகளை ஏற்படுத்த வேண்டியுள்ளமை முக்கிய விடயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளிலும் நிபுணர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளை முன்னெடுப்பது அவசியம். அதற்கென இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை பயன்படுத்தி வேலைத் திட்டங்களை பலமானதாக முன்னெடுக்க முடியும். 

அதேவேளை தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒன்லைன் பாடத்திட்டங்களையும் விரிவான வகையில் அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment