முதலாவது தடவையாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ள இளைஞர் யுவதிகள் இந்த வாக்களிப்பை தவறக்கூடாது - மட்டக்களப்பு உதவி தேர்தல்கள் ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 3, 2020

முதலாவது தடவையாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ள இளைஞர் யுவதிகள் இந்த வாக்களிப்பை தவறக்கூடாது - மட்டக்களப்பு உதவி தேர்தல்கள் ஆணையாளர்

வாக்காளர்கள் அடையாள அட்டையை ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாளைமறுதினம் 05.08.2020 இடம்பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முதலாவது தடவையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இளைஞர் யுவதிகள் இந்த வாக்களிப்பை முதலாவது அனுபவமாக்கிக் கொள்வதில் தவறக்கூடாது என தேர்தல்கள் உதவி ஆணையாளர் ரீ. ஹென்ஸ்மன் தெரிவித்தார்.

நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னாயத்தங்கள் சகலதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் பற்றி மேலும் விவரித்த அவர், ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற அதிகாரம் நாளைமறுதினம் மக்களின் கைகளுக்குச் செல்கின்றது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று தமது வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்வது தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பாக அமையும்.

குறிப்பாக இம்முறை முதன்முறையாக வாக்களிக்கும் தகைமை பெற்று வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ள இளையோர் தயக்கமின்றி இந்தத் தேர்தலின் மூலம் தமது முதல் வாக்களிக்கும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களுமாகச் சேர்த்து 38 அணிகளைக் கொண்ட இரு நிரல் வாக்குச் சீட்டு வருகிறது.

வழமை போன்று தாம் விரும்பிய கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ வாக்களித்து விட்டு விரும்பிய வேட்பாளர்களுக்கும் வாக்களிக்களிக்கலாம். புள்ளடியைத் தெளிவாக இட்டுக் கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் நீலம் அல்லது கறுப்பு குமிழ் முனைப் பேனாவை தம்வசம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் வழமையாக வாக்காளரின் அடையாள அட்டையை தனது கையில் எடுத்து சரிபார்த்து உறுதிப்படுத்துவதுண்டு. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை இருப்பதால் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் அலுவலர் வாக்காளரின் ஆளடையாள அட்டையை தனது கையால் எடுத்து பார்த்து உறுதிப்படுத்த மாட்டார் பதிலாக வாக்காளர் ஒருவர் தனது ஆளடையாள அட்டையை உறுதிப்படுத்தும் தேர்தல் அலுவலர் தெளிவாக நோக்கும் வண்ணம் வாக்காளர் மிகக் கிட்டிய தூரத்தில் வைத்து அதனை அலுவலரிடம் காண்பிக்க வேண்டும்.

வாக்காளர் வாக்களிப்பு நிலையத்திற்குள் உள் நுழையும்போதும் வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறும்போதும் கிருமித் தொற்று நீக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

வாக்காளர் அட்டை, குமிழ் முனைப் பேனா, ஆளடையாள அட்டை இவற்றைத் தவிர வேறேதும் தேவையற்ற பொருட்களை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என வாக்காளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்றார்.

No comments:

Post a Comment