கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் நான்கு தேரர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் நான்கு தேரர்கள் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் நால்வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் பௌத்த பீடாதிகள் உட்பட மேலும் நான்கு தேரர்கள் இந்தச் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 33 ஆவது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்தச் செயலணிக்கு அஸ்கிரிய பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாக சபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காண்பது, அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதன் மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பொருத்தமான திட்டத்தை கண்டறிந்து செயற்படுத்தும் நடவடிக்கையில் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாப்பதற்கும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அத்தகைய மரபுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கும் இந்த பணிக்குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment