மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஒரு கல்வி கற்பக தரு - 14 ஆண்டு நிறைவையொட்டி மனோ கணேசன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஒரு கல்வி கற்பக தரு - 14 ஆண்டு நிறைவையொட்டி மனோ கணேசன் எம்.பி

சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக ...
கற்பக தரு என்றால் வேண்டுவதை தரும் தேவலோக மரம். அதாவது பன்முக பயனை தரும் ஒரு விருட்சம் என புராணக் கதைகளில் கூறப்படுகிறது.

கபொத மாணவர்களுக்கு செயலமர்வுகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில், தரம் 5 ற்கான புலமைப்பரிட்சை கற்றல் வகுப்புகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி, விழிப்புணர்வு பேச்சாளர்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்தல் வகுப்புகள், மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்குகள், போட்டிப்பரிட்சைகள் நடத்துதல், இலங்கை அரச நிர்வாக சேவை (SLAS) வகுப்புகள் நடத்துதல். சர்வதேசம் செல்லும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல் என்று பற்பல பணிகளை புரியும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், தமது களப்பணிகளால், நமது கல்வி கற்பகதருவாக போற்றப்பட வேண்டும் என் நான் விரும்புகிறேன்.

ஒரு பாடசாலை, பலநூறு கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், விகாரைகளுக்கும் சமன் என்றும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றும் நம் சான்றோர் கூற கேட்கிறோம். ஆகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரே காரணத்தால் தம் கல்வியை ஆரம்பிக்க, தொடர, முடிக்க முடியாமல் இருக்கும் பெருந்தொகையான பள்ளி பிள்ளைகளுக்கு, பல்கலைக்கழக இளையோருக்கு உதவுவதால், எங்கள் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், இறைபணியையே ஆற்றுகிறது. 

மலையகத்தில் இருந்து தலைநகருக்கு தொழில் நோக்கில் வந்த, தம் ஆரம்பத்தி மறக்காத, இளைஞர்களால், 26.08.2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றத்தின் ஆரம்ப கூட்டம், செட்டியார் தெரு அன்னபூரணா உணவகத்தில் போசகர்கள் மற்றும் ஐம்பது உறுப்பினர்களால் நடத்தப்பட்டது என அறிகிறேன். அந்த ஐம்பது என்ற ஆரம்பம் தற்போது மொத்தமாக 3,500 அங்கத்தவர்களை கொண்டு, செயற்பாட்டில் 1,200 அங்கத்தவர்களையும் கொண்டு, 26ம் திகதியுடன் பதினைந்தாம் ஆண்டுக்குள் நுழைகிறது.

இதுவரை 700 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்தம் புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 7ம் கட்டமாக 76 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. தேசிய அனர்த்த நேரங்களிலும் இம்மன்றம் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. கொழும்பில் தொழில்புரியும் இளைஞர்களுக்காக வருடாந்த விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது. மற்றொரு கோணத்தில் பார்த்தால், மலையகம் என்ற பெயர் தொக்கி நின்றாலும், மலைநாட்டுக்கு வெளியேயும் கூட இம்மன்றத்தின் சேவை பரந்த மனதுடன் ஆற்றப்படுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தை நெறிப்படுத்தி வரும், அன்று முதல் இன்று வரையிலான போஷகர்களையும், பணிப்பாளர்களும், தலைவர்களையும், செயலாளர்களையும், நிர்வாக குழு உறுப்பினர்களையும் நான் நேரடியாக அறிவேன். “தான் வாழ்ந்தால் மட்டும் போதாது, தான் சார்ந்த சமூகமும், தான் பிறந்த நாடும் வாழ வேண்டும்” என எண்ணி காரியமாற்றும் இந்த நண்பர்கள் அனைவருக்கும், எதையும் தாங்கும் என் இதயத்தில் விசேட இட ஒதுக்கீடு எப்போதும் உண்டு. 

தலைநகர் தமிழ் பிரதிநிதி என்ற முறையில், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தை வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன். மனம் மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment