மலையக சொந்தங்கள் கைகட்டியே வாழ வேண்டும் என இன்னமும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் - நுவரெலியா வேட்பாளர் தினேஷ் குமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 7, 2020

மலையக சொந்தங்கள் கைகட்டியே வாழ வேண்டும் என இன்னமும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் - நுவரெலியா வேட்பாளர் தினேஷ் குமார்

”எமது மலையக சொந்தங்கள் கைகட்டியே வாழ வேண்டும் என இன்னமும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நாம் தவிடுபொடியாக்கி - எம்மவர்களை தலைநிமிர்ந்து வாழவைப்போம். எமது இளைஞர்கள் சிறந்தவர்கள், அவர்களின் பங்களிப்புடன் நிச்சயம் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ் குமார் தெரிவித்தார்.

‘கொவிட்-19’ வைரஸ் தாக்கத்தையடுத்து பாரியளவு மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகள்தோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் ஐயாவின் மகன் என்பதால் மக்கள் மத்தியில் தினேஷ் குமாருக்கான ஆதரவும் அதிகரித்து வருகின்றது.

மக்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வேட்பாளர் தினேஷ் குமார், ”எமக்கு தேர்தலைவிடவும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். அதுமட்டுமல்ல வேலை நேரங்களில் கூட்டத்துக்கு அழைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தடையேற்படுத்தக் கூடாது என்பதும் எனது நோக்கமாகும். 

இதன் காரணமாகவே நீங்கள் வீடுகளில் இருக்கும் நேரம் பார்த்து, வந்து பிரச்சாரம் செய்கின்றேன். வேலை நேரங்களில் உங்களுக்கு வழங்கப்படும் இடைவெளியிலும் கூட சந்திக்கின்றேன்.

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த மலையகம் அல்ல இன்று. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அன்றுபோல் இன்றும் மலையக மக்கள் வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது இளைஞர்கள் பல்துறைகளிலும் சாதனை படைத்துவருகின்றனர்.

அண்மையில்கூட மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக பதவியேற்றனர். ஆக கைகட்டி வாழ்ந்த யுகம் முடிவடைந்துவிட்டது. தலைநிமிர்ந்து வாழும் யுகம் பிறக்கும். அதனை அடைவதே எமது நோக்கம். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.” – என்றார்.

No comments:

Post a Comment