இருப்பை தக்கவைத்து கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் - திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

இருப்பை தக்கவைத்து கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் - திகாம்பரம்

நுவரெலியாவில் தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே, எமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் 01.07.2020 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "நான் அமைச்சராக வந்த பின்னரே நிலவுரிமையுடன் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தேன். நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமல்ல மலையக மக்கள்வாழும் அனைத்து பகுதிகளிலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மலையக அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு அங்கீகாரம் தாருங்கள் செய்துகாட்டுகின்றோம் என சிலர் இன்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மக்களுக்கு சேவைகளை செய்துவிட்டே நாம் வாக்குகேட்டுவந்துள்ளோம். இந்நிலையில் எமது இருப்பை இல்லாதுசெய்வதற்காக நிறைய பாராளுமன்ற உறுப்பினர்களை களமிறக்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்தே கூடுதல் மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவாவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தெரிவாகும்பட்சத்திலேயே தோட்டதுரையாக இருந்தாலும், பொலிஸாக இருந்தாலும் பிரச்சினையெனவந்தால் பேசமுடியும். எனவே, இருக்கும் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் ஆக்கக்கூடாது என்பதால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

50 ரூபாவை வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். அதனை நவீன் திஸாநாயக்கவே தடுத்தார். ஆகவே, ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்ககூடாது. எமது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஆணைவழங்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நான் உங்களில் ஒருவன். தோட்டத்தில் பிறந்து வாழ்ந்தவன், எனவே, என்மீது நம்பிக்கை வையுங்கள். வாக்குகளைப் பிரிப்பதற்காக பலர் முயற்சிக்கலாம். அதற்கெல்லாம் ஏமாறவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் 5 வருடங்களாக பேசப்படுகின்றது. இறுதியாக ஜனாதிபதியின் கருத்தைக்கூட கம்பனிகள் கேட்கவில்லை. மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவன் நான். எனவே, மக்களுக்கான எனது சேவை தொடரும். நுவரெலியா மாவட்டத்தில் இருக்கும் வாக்காளர்கள் எனக்கும், உதயாவுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் வாக்களிக்கவேண்டும் என கோருகின்றேன்." - என்றார்.

மலையக நிருபர்

No comments:

Post a Comment